ஜம்மு காஷ்மீரில் நாளை வாக்கு எண்ணிக்கை… உச்சகட்ட பாதுகாப்பில் உதம்பூர்..!

ஜம்மு காஷ்மீரில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், உதம்பூர் மாவட்டத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இதையொட்டி, அந்த மாவட்டத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக எஸ்எஸ்பி அமோத் அசோக் நாக்புரே தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு, சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்தது. ஆனால் இப்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக உள்ளது. அதோடு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் சந்தித்த முதல் தேர்தல் இதுவாகும்.

இந்த தேர்தலில் 3 முனை போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சியும், முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவும், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியும் தனித்து களமிறங்கி உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 46 இடங்களில் வெல்ல வேண்டும் என்ற நிலையில், 3 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. கடந்த மாதம் 18 ம் தேதி 24 தொகுதிகளுக்கு, கடந்த மாதம் 25ம் தேதி 26 தொகுதிகளுக்கும், அக்டோபர் 1ம் தேதி 40 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் அக்டோபர் 8 ம் தேதி (நாளை) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய ஆயுதப் படையினர் (சிஏபிஎஃப்) , மாநில ஆயுதப் படை காவல் துறையினர் மற்றும் மாவட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகள், வாக்கு எண்ணும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூம்களில் டிஎஸ்பி அளவிலான அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதையொட்டி, சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பகுதியின் 100 மீட்டர் சுற்றளவுக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படாது. அதேபோல, வாக்கு எண்ணும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் மற்றும் வாக்குப் எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளில் பொதுமக்கள் நடமாட அனுமதி இல்லை. முறையான அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் சிறப்பு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதுகுறித்து விரைவில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்று உதம்பூர் மாவட்ட எஸ்எஸ்பி அமோத் அசோக் நாக்புரே தெரிவித்துள்ளார்.

ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் தொடர்பான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகின. இந்தியா டுடே சி வோட்டர்ஸ் கருத்துக் கணிப்பு, என்டிடிவி, தைனிக் பாஸ்கர், பீப்பிள்ஸ் பல்ஸ் ஆகியோரின் கருத்துக் கணிப்புப் படி தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த மும்முனைப் போட்டியில் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கூட்டணி நூலிழையில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர். பாஜக இந்த தேர்தலில் பல்வேறு வியூகங்களை வகுத்தது. நயா காஷ்மீர் என்ற முழக்கத்துடன் அந்தக் கட்சியின் அனைத்துத் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

தேசிய மாநாடு – காங்கிரஸ் கூட்டணியும் களத்தில் தீவிரமாக பணியாற்றியது. இந்த மும்முனைப் போட்டியில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைப்பது சந்தேகம் என்று தகவலும் பரவி வருகிறது. அப்படி நடந்தால் மெஹபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியும், ரஷீதின் அவாமி இத்தியாட் கட்சியும் கிங் மேக்கர்களாக இருப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.