கல்லூரி மாணவர்களே உஷார்… “நோ ஹெல்மெட் நோ என்ட்ரி ” கல்லூரியில் வந்து விட்டது புதிய திட்டம்.!!

கோவை மாநகரில் இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்துக்குள்ளாகி அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் கோவை மாநகரம் அவினாசி சாலையில் அமைந்துள்ள அனைத்து கல்லூரிகளின் முதல்வருடன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இருசக்கர வாகனங்களில் வரும் கல்லூரி மாணவர்கள் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கல்லூரிக்குள் வரும்போது தலைக்கவசம் அணியாமல் வந்தால் அவர்களை கல்லூரி வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இதனை அனைத்து கல்லூரி முதல்வர்களும் ஏற்றுக்கொண்டு இதை உடனடியாக அமல்படுத்துவதற்கு உறுதியளித்தார்கள். அதன் அடிப்படையில் ஒவ்வொரு கல்லூரி நுழைவாயில் முன்பும் “நோ ஹெல்மெட் நோ என்ட்ரி ” என்ற வாசகம் கொண்ட பதாகைகள் வைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் அவர்களது வளாகத்திற்குள் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தலைக்கவசம் அணிந்து கல்லூரி வளாகத்திற்குள் வருவதை உறுதிப்படுத்தும். வரும் நாட்களில் இத்திட்டமானது இதன் முக்கிய சாலைகளில் அனைத்து கல்லூரிகளுககும் விரிவுபடுத்தப்படும். கல்லூரிகளை தொடர்ந்து பள்ளி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், மால்கள் வணிகவளாகங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தம் என படிப்படியாக மாநகரில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் கல்லூரி நிர்வாகம் மற்றும் தொழில்நிறுவனங்கள் தங்கள் நிர்வாகத்தில் படிக்க வரும் மாணவர்கள் பணி செய்ய வரும் ஊழியர்களின் உயிர்களை பாதுகாக்கும் பொறுப்பு தங்களுக்கு உண்டு என்பதை உணர்ந்து இந்த முன் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது இந்த நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர்கள் அசோக் குமார், ஸ்டாலின், உதவி கமிஷனர் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.