மின்சாரம் பாய்ந்து 2 பெண் யானைகள் பரிதாப பலி..

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வரச் சரக பகுதியில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளும், அரிய வகை பறவைகளும் உள்ளன. இந்த நிலையில் கோட்டூர் பிரிவு, பருத்தியூர், உமாண்டி பகுதியில் வனத்துறையினர் நேற்று ரோந்து சுற்றி வந்தனர். அப்போது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் 2 பெண் யானைகள் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் உத்தரவின் பேரில் வனச்சரகர் ஞான பாலமுருகன் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது தனியார் பட்டா பூமியில் இருந்த மின் கம்பியை தொட்டதால் மின்சாரம் தாக்கி யானைகள் இறந்திருக்கலாம் என்பது தெரிய வந்தது. இதையடுத்து யானைகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் மழை பெய்து கொண்டிருந்ததாலும் இரவு நேரமாகி விட்டதாலும் நேற்று நடைபெறவில்லை. இன்று (செவ்வாய்க்கிழமை) கால்நடை மருத்துவ அலுவலர் தலைமையில் இறந்த யானைகளின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:- அந்த தனியார் பட்டா நிலத்தில் வழக்கமான உயரத்தில் தான் மின்கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேடானபகுதியில் இருந்து சமவெளி பகுதிக்கு யானைகள் இறங்கிய போது விபத்து நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்..