ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்… மனித உரிமை கமிஷனில் மன்னிப்பு கேட்டார் கமிஷனர் அருண்.!!

சென்னை: ‘ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்’ என, கூறிய விவகாரத்தில், மாநில மனித உரிமை கமிஷனில், மன்னிப்பு கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அருண் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக அருண், ஜூலை 8ல் பொறுப்பேற்றார்.
அவர் அளித்த பேட்டியில், ‘ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்’ என, எச்சரிக்கை விடுத்தார். அதற்கு ஏற்ப, சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம், ‘என்கவுன்டர்’ செய்யப்பட்டார். அதன் பின், ரவுடிகள் காக்கா தோப்பு பாலாஜி, சீசிங் ராஜா ஆகியோரும் ‘என்கவுன்டர்’ நடவடிக்கையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.உதவி கமிஷனர் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று, அவர்களின் உறவினர்களை சந்தித்து, எச்சரிக்கை செய்தனர்.சென்னை திருவொற்றியூரில் உள்ள, ரவுடி ஒருவரின் வீட்டிற்குச் சென்ற உதவி கமிஷனர் இளங்கோவன், அவரது மனைவியிடம், ‘உங்கள் கணவர் கத்தியை எடுத்து ஏதேனும் கொலை வழக்கில் சிக்கினால், என்கவுன்டர் தான். கை கால்கள் உடைக்கப்படும்’ என, எச்சரித்தார்.இச்சம்பவங்கள் குறித்து, மாநில மனித உரிமை கமிஷன் தானாக முன்வந்து, உதவி கமிஷனர் இளங்கோவன் மற்றும் அவருடன் சென்ற போலீசார் மீது வழக்குப்பதிவு செய்தது. அக்., 14ல் ஆஜராக வேண்டும் என, கமிஷனர் அருணுக்கு, ‘சம்மன்’ அனுப்பியது.அதையடுத்து, நீதிபதி மணிக்குமார் முன், அருண் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜரானார். நேற்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அருண் சார்பில், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, கமிஷனரின் பேச்சுக்கு மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்தார்.