உச்சம் தொட்ட காற்று மாசு… டெல்லியில் முதியவர்கள், நோயாளிகள் கடும் பாதிப்பு.!!

டெல்லி: டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தொடங்கி ஜனவரி இறுதி வரை காற்று மாசு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

நோயாளிகள், குழந்தைகள், முதியவர்கள் காற்று மாசு காரணமாக கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளை சந்தித்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில், டெல்லியில் தற்போது கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நேரத்தில் டெல்லியில் காற்று மாசு பெரும் சிக்கலாக உருவெடுக்கும். இந்த முறையும் காற்று மாசு மக்களை பாதிக்க தொடங்கியுள்ளது. டெல்லியில் பெரும்பாலும் மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, வாகனங்கள் மூலம் மாசு ஏற்படுவதில்லை.

கட்டிடங்களை இடித்தல், டெல்லியை சுற்றியுள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை, ஹரியானா, உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகள் போன்றவற்றால் டெல்லி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

காற்றில் உள்ள மாசை அளவிட காற்று தரக் குறியீடு (AQI) பயன்படுத்தப்படுகிறது. இது 0-500 வரை அளவை கொண்டிருக்கிறது. இதில் 0 என்பது சுவாசிக்க ஏற்ற நல்ல தரமான காற்றாகும். இதுவே 500 எனில், அந்த காற்று உடனடியாக மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தற்போது டெல்லியில் காற்றின் தரம் 300ஐ விட அதிகமாக இருக்கிறது. இந்த அளவு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

ஐடிஓ பகுதியில் AQI 226, இந்தியா கேட் பகுதியில் AQI 251, பிகாஜி காமா பிளேஸ் பகுதியில் AQI 273, டெல்லி எய்ம்ஸ் பகுதியில் AQI 253 என காற்றின் தரம் பதிவாகியுள்ளது. காற்று மாசை கட்டுப்படுத்த 13 மாசு கட்டுப்பாட்டு கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இது நிரை பீய்ச்சி அடிப்பதன் மூலம் காற்றில் உள்ள மாசை நீக்குகிறது.

அசோக் விஹார், துவாரகா, முண்ட்கா, ஜஹாங்கிர்புரி, ரோகிணி, நரேலா, ஓக்லா, பஞ்சாபி பாக் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள், டிராபிக் ஜாம் உள்ளிட்டவற்றால் இப்பகுதிகளில் காற்று மாசு அதிக அளவில் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மாசு குறித்து டெல்லி மக்கள் கூறுகையில், “அதிகாலையில் நடை பயிற்சி மேற்கொள்வது வழக்கம். ஆனால், இப்போது டெல்லி பனி படர்ந்ததை போல காட்சியளிக்கிறது. அந்த அளவுக்கு காற்று மாசுபட்டிருக்கிறது. இதனால் மூச்சு திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. குழந்தைகளும், முதியவர்களும், நோயாளிகளும் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்” என்று கூறியுள்ளனர்.

டெல்லியில் காற்று மாசை குறைக்க மாநில அரச தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.