டெல் அவிவ்: ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்து இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையே பெய்ரூட் மருத்துவமனைக்குக் கீழ் ஒரு பதுங்கு குழி இருப்பதாகவும் அதில் கோடிக் கணக்கில் பணம், தங்கத்தை ஹிஸ்புல்லா அமைப்பு பதுக்கி வைத்து இருப்பதாகவும் இஸ்ரேல் இப்போது தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இஸ்ரேல் ஒரு பக்கம் ஹமாஸை எதிர்த்துச் சண்டையிட்டு வருகிறது. அதேநேரம் மற்றொருபுறம் ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்தும் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஹிஸ்புல்லா என்பது லெபனான் நாட்டில் இயங்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஒரு அமைப்பாகும். காசாவில் ஹமாஸ் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேலும் பதிலடி தரவே மோதல் பெரிதானது. சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பினர் தலைவர் நஸ்ரல்லாவும் கொல்லப்பட்டார்.
இதற்கிடையே இஸ்ரேல் தரப்பில் இப்போது மிக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் அமைந்துள்ள பெய்ரூட் தலைமை மருத்துவமனைக்குக் கீழ் ரகசிய ஹிஸ்புல்லா சுரங்கம் இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இது ஹிஸ்புல்லா அமைப்பின் நிதி மையமாகச் செயல்படுவதாகவும் இந்த பதுங்கு குழியில் பல லட்சம் அமெரிக்க டாலர் இருப்பதாகவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இஸ்ரேல் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியது. ஹிஸ்புல்லா அமைப்பின் நிதி மையங்களைக் குறிவைத்துத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இதற்கிடையே இஸ்ரேல் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளது. டிவியில் மக்களிடம் பேசிய இஸ்ரேல் ராணுவத்தின் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி இது தொடர்பாக விரிவான தகவலைப் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், “இப்போது மிக முக்கியமான உளவுத் தகவலை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஹிஸ்புல்லா தலைவராக இருந்த ஹசன் நஸ்ரல்லாவின் பதுங்கு குழி பெய்ரூட்டின் இதய பகுதியான அல்-சஹேல் மருத்துவமனையின் கீழ் அமைந்துள்ளது. இதில் பல லட்சம் அமெரிக்க டாலர் ரொக்கமும், தங்கமும் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளது
இதை உறுதி செய்யும் உளவுத் தகவல்கள் எங்களிடம் உள்ளது. ஆனாலும், மருத்துவமனை கீழ் இருப்பதால் நாங்கள் அந்த இடத்தை தாக்கவில்லை. அங்குக் குறைந்தது அரை பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 4 ஆயிரம் கோடி) மற்றும் தங்கம் இருக்கும் என நினைக்கிறோம். இந்த பணத்தை வைத்து அவர்களால் ஒட்டுமொத்த லெபனானையும் கூட கட்டியெழுப்ப முடியும். ஆனால், அதைச் செய்யாமல் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள்” என்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஹிஸ்புல்லாவுடன் தொடர்புடைய நிதி அமைப்பான அல்-கார்ட் அல்-ஹசன் (AQAH) நடத்தும் இடங்கள் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை நடத்தி இருக்கிறது. இந்த அல்-கார்ட் அல்-ஹசன் தங்கலை ஒரு தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்தாலும் அது ஹிஸ்புல்லாவுக்கு நிதி திரட்டும் அமைப்பாகவே செயல்படுவதாக உலக நாடுகள் குற்றஞ்சாட்டுகின்றன. இந்த அல்-கார்ட் அல்-ஹசன் அமைப்பின் சுமார் 30+ இடங்களைக் குறிவைத்தே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.