தீபாவளி முன்னிட்டு சதித் திட்டம்..? உளவுத் துறை எச்சரிக்கை – 8 மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு..!

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், தமிழகத்தில் மக்கள் கூடும் இடங்களில் பயங்கரவாத சதித் திட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கையை தொடர்ந்து, தீவிர கண்காணிப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு காவல்துறை தலைமையகத்தில் பணிபுரியும் காவல்துறை அதிகாரி ஒருவர், தீபாவளி பண்டிகையை சீர்குலைக்கு விதமாக சதிச் செயல் நடக்க வாய்ப்புள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையொட்டி, கோவை உக்கடத்தில் காரில் வெடிகுண்டு வெடித்த சம்பவத்தை தொடர்ந்து, கடந்தாண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த முறை உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால், தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை மாநகரைப் பொறுத்தவரை 18,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

மக்கள் அதிகம் கூடும் இடங்களான சென்னை தியாகராய நகர், பாண்டி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீஸார் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர்.

மேலும், மாம்பலம் காவல் நிலையத்தில் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறையையும் சென்னை போலீஸார் அமைத்துள்ளனர். தீவிர ரோந்துப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதி, உக்கடம் பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் தெருவில் அமைந்துள்ள புராதானமிக்க அருள்மிகு கோட்டை சங்கமேஷ்வரர் திருக்கோயில் அருகே, கார் ஒன்று வெடித்துச் சிதறியது.

இந்த பயங்கரவாத செயலில், ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய ஜமீஷா முபீன் என்பவர் ஈடுபட்டதாகவும், அவர் தற்கொலைப் படை தாக்குதல் நிகழ்த்தி அந்த காரை வெடிக்கச் செய்ய வைத்தபோது உயிரிழந்துவிட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.

இஸ்லாம் மதத்தின் மீது நம்பிக்கையில்லா மனிதர்களை பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

இந்த வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கோவை அரபிக் கல்லூரியில் பணியாற்றிய அபூ ஹனீஃபா உள்ளிட்ட 15 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கைது செய்துள்ளனர்.