அடேங்கப்பா!! இவ்வளவு வசதிகளா… வந்தே பாரத் ரயிலில் ஸ்லீப்பர் வசதி… விரைவில் அறிமுகம்.!!

சென்னை: இந்தியாவில் இதுவரை வந்துள்ள வந்தே பாரத் எல்லாம் உட்காரும் வகையில் தான் உள்ளன. இந்த ரயில்கள் எல்லாம் பகல் நேரங்களில் மட்டுமே சென்று வருகின்றன.

படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் இருந்தால் தான் இரவு நேரங்களில் வந்தே பாரத் ரயிலை இயக்க முடியும். இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என ஐ.சி.எப். பொது மேலாளர் சுப்பாராவ் தெரிவித்தார்.

படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை அதனை தயாரிக்கும் பணியினை பெங்களூரில் உள்ள பி.இ.எம்.எல். (பெமல்) மற்றும் சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலை ஆகியவை ஒருங்கிணைந்து மேற்கொள்கின்றன. கடந்த ஆகஸ்டு மாதம் தயாரிப்பு பணிகள் முடிந்து பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கட்ட பரிசோதனைகளுக்காக இந்த ரயில் கடந்த வாரம் சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலைக்கு (ஐ.சி.எப்.) கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் நேற்று, ஐ.சி.எப். பொதுமேலாளர் சுப்பாராவ், படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரயிலை ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், இரவு நேரங்களில் பயணிகள் எளிதாக மேற்கொள்ள படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டு உள்ளது. படுக்கை வசதி கொண்ட வந்தே ரயிலில் ஆய்வு பணிகள் நவம்பர் 15-ந்தேதிக்குள் முழுமையாக முடிந்துவிடும். அதன் பின்னர் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவுக்கு அனுப்பி வைக்கப்போம். அங்கு ரயில்வே தரம் மற்றும் வடிவமைப்பு நிறுவனம் மீண்டும் இந்த ரயிலை ஆய்வு செய்யும். அங்கு, 180 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி பரிசோதிக்கப்படும். முழுமையான சோதனைகள் நடத்தப்பட்டு வருகிற ஜனவரி 15-ந்தேதி ரயில்வே வாரியத்திடம் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் ஒப்படைக்கப்படும். அதன்பின்னர் எந்த வழித்தடத்தில் ரயிலை இயக்குவது என்று ரயில்வே வாரியம் முடிவு செய்யும். ஆகவே வருகிற 2025, ஜனவரி மாதம் இறுதியில் மக்கள் பயன்பாட்டுக்கு படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் இயக்கப்படும்.

படுக்கை வசதி கொண்ட 50 வந்தே பாரத் ரெயில்களை ஐ.சி.எப். தயாரிக்க இருக்கிறது. இந்த ரயில்கள் 16 பெட்டிகள் கொண்டதாக தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. அடுத்ததாக 24 பெட்டிகள் கொண்ட வகையில் வந்தே பாரத் ரயில் நாங்கள் தயாரிக்க உள்ளோம்.. இந்த நிதியாண்டில் மொத்தம் 2 ஆயிரத்து 500 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர 7 நமோ வந்தே மெட்ரோ தயாரிக்கும் பணி தொடங்க உள்ளோம்.

அதேபோல் தெற்கு ரெயில்வேயில் இயக்குவதற்கு குளிர்சாதன வசதி அடங்கிய மின்சார ரெயில் பெட்டிகள் டிசம்பருக்குள் தயாரித்து வழங்க திட்டமிட்டுள்ளோம். வணிக பயன்பாட்டுக்கான வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணியும் இப்போது வேகமாக நடந்து வருகிறது. படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தயாரிக்க ரூ.120 கோடி செலவாகிறது. இது வழக்கமான இலகுரக (எல்.எச்.பி.) பெட்டிகளை ஒப்பிடும் போது ரூ.8 கோடி கூடுதல் செலவாகும். படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயிலின் வடிவமைப்பை உருவாக்க எங்களுக்கு ஒரு வருடம் வரை ஆகிறது” என்றார்.

படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலில் உள்ள வசதிகள் என்ன: படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலில் ஒரே சமயத்தில் 823 பேர் பயணிக்க முடியும். அனைத்துமே படுக்கை வசதி கொண்ட பெட்டிகளாக மட்டுமே இருக்கும். இதில் பொதுப்பெட்டி இருக்காது. முதல் வகுப்பு, 2-ம் வகுப்பு, 3-ம் வகுப்பு என்று என்ற 3 வகை ஏ.சி. பெட்டிகளாக இந்த ரயில்கள் இருக்கும். இதில், முதல் வகுப்பு ஏ.சி. பெட்டி ஒன்று மட்டுமே இருக்கும். இதில் ஒரே நேரத்தில் 24 பேர் பயணம் செய்யலாம். 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டிகள் 4 இருக்கிறது. இதில், 188 பயணிகள் பயணிக்க முடியும். 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டிகள் மொத்தம் 11 இருக்கிறது. இதில் 611 பேர் பயணம் மேற்கொள்ளலாம்.

வந்தே பாரத் ரயிலை பொறுத்தவரை படுக்கைக்கு அருகே அவசர காலங்களில் ரயில்களை நிறுத்தும் பட்டன்கள் இருக்கும் ஒரு பெட்டியில் இருந்து மற்றொரு பெட்டிக்கு இடையில் தானியங்கி கதவுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும். ஒவ்வொரு பெட்டிக்கும் இடையே ‘எமர்ஜன்சி டாக் பேக் யூனிட்’ கருவி இருக்கும். இதன் மூலம் லோகோ பைலட்டிடம், பயணிகள் நேரடியாக பேசிக்கொள்ள முடியும். லோகோ பைலட் அறையில் ரயில்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கும். இந்த ரயில் அதிகபட்சமாக 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இதேபோல் அனைத்து பெட்டிகளிலும் தீ அணைப்பான் கருவி பாதுகாப்பிற்காக இடம் பெற்றிருக்கும்.