பாகிஸ்தானில் பாதுகாப்பு சாவடி மீது பயங்கரவாத தாக்குதல் – 10 அதிகாரிகள் கொலை..!

ஸ்லாமாபாத்: வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்பு சாவடி மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 அதிகாரிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் வட மேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் தேரா இஸ்மாயில் கான் நகருக்கு வெளியே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரிகளுக்கு எதிராக நேற்று (அக். 24) தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினர் துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில், குறைந்தது 10 பேர் உயிரிழந்துவிட்டதாக கைபர் பக்துன்வா காவல்துறையும் மாநில முதல்வர் அலி அமின் கந்தாபுரும் இன்று தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக் இ பாகிஸ்தான் தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தங்கள் அமைப்பைச் சேர்ந்த உஸ்தாத் குரேஷி கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்கும் நோக்கில் இந்த தாக்குதலை நிகழ்த்தியதாக அந்த அமைப்பு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானை ஒட்டிய பஜோர் மாவட்ட எல்லையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் குரேஷி உள்ளிட்ட 9 பேர் சமீபத்தில் கொல்லப்பட்டனர்.

2021-ல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து, தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என அழைக்கப்படும் பாகிஸ்தான் தலிபான்கள் வலுவடைந்து வருகிறார்கள். இவர்களுக்கு எதிராக பாதுகாப்புப் படைகள் உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) ஒரு தனி குழு என்றும், அதேநேரத்தில் ஆப்கானிஸ்தான் தலிபான்களின் நெருங்கிய கூட்டாளி என்றும் கூறப்படுகிறது.