காவல் நிலையங்களின் அனைத்து அறையிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் – கோர்ட் உத்தரவு..!

போபால்: மனித உரிமை மீறலைத் தடுக்க மாநிலம் முழுதும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களின் அனைத்து அறைகளிலும் மூன்று மாதங்களுக்குள் சிசிடிவி கேமராக்களை நிறுவ மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேசத்தின் அனுப்பூர் மாவட்டத்தில் உள்ள பாலுமடா போலீசார், கடந்த ஆண்டு செப்டம்பரில் லாரி டிரைவரான அகிலேஷ் பாண்டியாவிடம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. சித்ரவதைபணம் தர அவர் மறுத்ததை அடுத்து, அவரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்ற போலீசார், சிசிடிவி கேமரா இல்லாத அறைக்கு அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கி சித்ரவதை செய்தனர். இதில், அவர் படுகாயம் அடைந்தார்.

தவறு எதுவும் செய்யாத நிலையில், போலீஸ் ஸ்டேஷனில் சித்ரவதை செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய பிரதேச உயர் நீதிமன்ற ஜபல்பூர் கிளையில் அகிலேஷ் மனுத் தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு விசாரணை நிறைவுபெற்ற நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.நீதிபதி அளித்த தீர்ப்பு: மனுதாரரான அகிலேஷ் அளித்த விபரங்களின்படி, போலீஸ் ஸ்டேஷனில் அவர் தாக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டது உறுதியாகிறது.இதற்காக வேண்டுமென்றே அவர் சிசிடிவி கேமராக்கள் இல்லாத அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். தாக்குதலை மறைக்க போலீசார் பல நடவடிக்கைகள் எடுத்ததும் தெரியவந்துள்ளது. ஆடியோ வசதிபோலீஸ் ஸ்டேஷனில் மனித உரிமைகள் மீறப்படுவது கவலை அளிக்கிறது. இந்த விவகாரத்தில், அகிலேஷை தாக்கிய போலீஸ் அதிகாரி 1.20 லட்சம் ரூபாயை இழப்பீடாக ஒரு மாதத்துக்குள் அவருக்கு வழங்க வேண்டும்.இது போன்ற சம்பவங்களைத் தடுக்க, மாநிலம் முழுதும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களின் அனைத்து அறைகளிலும் ஆடியோ வசதியுடன் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட வேண்டும். மூன்று மாதங்களுக்குள் படிப்படியாக இதை செயல்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் சிசிடிவி கேமரா இல்லாத அறைகள் இருப்பது கண்டறியப்பட்டால், அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்பட்டு சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.