ரத்தன் டாடா உயில்… சமையல்காரர், உதவியாளர், வளர்ப்பு நாய்க்கு சொத்தில் பங்கு..!!

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

புதுடெல்லி: ரத்தன் டாடா எழுதி வைத்த உயில் விவரங்கள் வெளியான நிலையில், அதில் தனது சமையல்காரர், உதவியாளர், வளர்ப்பு நாய்க்கும் அவர் சொத்துக்களை ஒதுக்கியுள்ளார்.

இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா கடந்த 9-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இந்த நிலையில், அவர் எழுதி வைத்த உயில் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ரத்தன் டாடாவுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துகள் உள்ளன. அவரது சகோதரர் ஜிம்மி டாடா, தனது தாயின் இரண்டாவது திருமணத்தின் மூலம் பிறந்த ஒன்றுவிட்ட சகோதரிகள் ஷிரீன் மற்றும் டீன்னா ஆகியோருக்கும் சொத்துகள் கிடைக்கும்படி ரத்தன் டாடா உயில் எழுதி வைத்துள்ளார்.

இவர்கள் தவிர்த்து தனது மனதுக்கு நெருக்கமான உதவியாளர் சாந்தனு, சமையல் கலைஞர் ராஜன் ஷா, மற்றும் சமையல் உதவியாளர் சுப்பையா ஆகியோருக்கும் உயில் எழுதியுள்ளார். மேலும், அவரது பிரியத்துக்குரிய வளர்ப்பு நாயான டிட்டோவின் பெயரையும் உயிலில் குறிப்பிட்டுள்ளார். உயிலில் வளர்ப்பு நாய் டிட்டோவை ராஜன் ஷா கவனித்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள ரத்தன் டாடா, அதைக் கவனித்துக் கொள்ள ஆகும் செலவை ஈடுகட்டும் வகையில் சொத்துக்களை ஒதுக்கியுள்ளார்.

ராஜன் ஷா மற்றும் சுப்பையா இருவரும் டாடாவுடன் 30 ஆண்டுகளுக்கு மேல் இருந்தவர்கள். டாடா வெளிநாடுகளுக்கு செல்லும்போதும் கூட அவருடன் இவர்கள் இருவரும் செல்வது வழக்கம். சாந்தனு வெளிநாட்டில் சென்று படிக்க டாடா நிறுவனம் கடன் கொடுத்தது. அக்கடனை ரத்தன் டாடா தள்ளுபடி செய்துள்ளார்.

மும்பை ஜுகுதாரா சாலையில் இரண்டு மாடிகள் கொண்ட வீடு, கடற்கரை நகரமான அலிபாக்கில் 2,000 சதுர அடி கொண்ட கடற்கரையோர பங்களா, 350 கோடி வங்கி டெபாசிட்கள் மற்றும் டாடா சன்ஸ் குழுமத்தில் 0.83 சதவீத பங்குகள் என ரத்தன் டாடா பெயரில் சொத்துக்கள் உள்ளன. அவரது பங்குகள் அனைத்தும் டாடா குழுமத்தின் பாரம்பரியத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்ட ஒரு தொண்டு அறக்கட்டளையான ரத்தன் டாடா எண்டோவ்மென்ட் அறக்கட்டளைக்கு மாற்றப்படும் என்று உயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா குழுமத் தலைவராக இருந்து, அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா. மும்பையில் புகழும் வளமும் மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர். டாடா குழும நிறுவனர் ஜாம்ஷெட்ஜி டாடாவின் கொள்ளுப் பேரன். 1962-ல் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்புப் பொறியியலில் பி.எஸ்சி. பட்டம், 1975-ல் ஹார்வர்டு வணிகக் கல்லூரியில் உயர் மேலாண்மைப் பட்டம் பெற்றார்.

1962-ல் டாடா குழுமத்தில் இணைந்தார். 1971-ல் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த தி நேஷனல் ரேடியோ அண்ட் எலக்ட்ரானிக்ஸ் கம்பெனி நிறுவனத்தின் (Nelco) பொறுப்பு இயக்குநராக பொறுப்பேற்றார். இவரது ஆலோசனைகளால் நெல்கோ மீண்டது. 1991-ம் ஆண்டு ஜே.ஆர்.டி.டாடாவிடம் இருந்து டாடா குழுமத் தலைவர் பொறுப்பை ஏற்றார். பல புதிய திட்டங்களைப் புகுத்தி நிறுவனத்தின் வருமானத்தை 10 மடங்கு உயர்த்தினார். கோரஸ், ஜாகுவார் லேண்ட் ரோவர் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்களை டாடா குழுமம் வாங்கியது.

பங்குச் சந்தையில் மிக அதிக சந்தை முதலீடு கொண்டதாக டாடா குழுமம் திகழ்கிறது. இவரது வழிகாட்டுதலில் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் பொது நிறுவனமானது. நியூயார்க் பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்டது.

நடுத்தரக் குடும்பத்தினர் ஒரு பைக்கில் 4 பேராக கஷ்டப்பட்டுப் போவதைப் பார்க்கும்போதெல்லாம், குறைந்த விலையில் சிறிய கார் தயாரிக்கவேண்டும் என்ற உந்துதல் இவரிடம் ஏற்பட்டது. இந்த கனவு, ‘டாடா இண்டிகா’ வடிவில் 1998-ல் நிஜமானது. உலகிலேயே மலிவாக ரூ.1 லட்சத்துக்கு கார் வெளியிடுவதாக அறிவித்தார். ‘டாடா நானோ’ கார் 2008-ல் உற்பத்தியாகி வந்தபோது அதன் செலவு அதிகரித்துவிட்டது. ஆனாலும், விலையை உயர்த்த மறுத்துவிட்டார்.

இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்திய தொழிலதிபர் இவர். பிரதமரின் வணிகம் மற்றும் தொழில்கள் தொடர்பான குழுவில் உறுப்பினராக இருந்தவர். பல்வேறு வெளிநாட்டு அறக்கட்டளைகளுக்கு அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்தவர். பில்கேட்ஸ் நிறுவனத்தின் இந்திய எய்ட்ஸ் திட்டக் குழுவிலும் இருந்தவர்.

பத்மபூஷண், பத்மவிபூஷன், நற்பணிகளுக்கான கார்னகி பதக்கம், சிங்கப்பூர் அரசு வழங்கிய கவுரவக் குடிமகன் அந்தஸ்து, பிரிட்டிஷ் அரசின் ஹானரரி நைட் கமாண்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர் ஆகிய கவுரவங்களைப் பெற்றுள்ளார். டைம் இதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்கு படைத்த 100 பேர் பட்டியல் மற்றும் உலகின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் இடம்பெற்றவர். 2012 வரை டாடா குழுமத் தலைவராக இருந்த இவர் தற்போது டாடா குழும அறக்கட்டளைகளின் தலைவராக இருந்து வழிநடத்தியவர்.