சென்னை: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை, சிபிஐக்கு மாற்றி சென்னை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது..
பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்திருந்த வழக்கில் இன்றைய தினம் ஹைகோர்ட்டில் இந்த பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி அன்று மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 193 பேர் மருத்துவமனைகளில் அனுமததிக்கப்பட்டனர். அதில் 67 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே, கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கின் விசாரணையை காவல்துறை விசாரித்தால் நியாயமாக இருக்காது.. எனவே, சிபிஐக்கு மாற்ற வேண்டும் பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், மாவட்ட வாரியாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது? எத்தனை பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது? என அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு சார்பில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
பிறகு, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மாவட்டங்கள் முழுவதும் அதிகமான கள்ளச்சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. மாநில அரசின் விசாரணை அமைப்பு விசாரணை செய்தால் உண்மை வெளிவராது.
எனவே, விசாரணையை மாற்று அமைப்புக்கு மாற்ற வேண்டும். உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க அரசாங்கம் நினைத்தால் வழக்கை சிபிஐ அல்லது என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். முக்கிய அரசியல் கட்சியினருக்கு நேரடி தொடர்பு உள்ளது. அதனால் தான் மாற்று அமைப்புக்கு விசாரணையை மாற்ற அரசு மறுப்பு தெரிவிக்கிறது” என்று வாதம் செய்தார்.
இதையடுத்து நீதிபதிகள், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளரின் பணியிடை நீக்கம் உடனடியாக திரும்ப பெறப்பட்டதற்கான காரணம் என்ன? துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்ன விசாரணை நடத்தப்பட்டது? அரசாணையின்படி ஒரு மாதத்தில் விசாரனை அறிக்கை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை என்ன விசாரணை நடத்தப்பட்டது? அறிக்கை என்ன?
கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமான கள்ளச்சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? மதுவிலக்கு துறை ஏன் சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவில்லை? என்றெல்லாம் நீதிபதிகள் கேள்விகளை எழுப்பியிருந்தனர். அத்துடன், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமலும் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரிய பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுக்கள் இன்று அதாவது நவம்பர் 20ம் தேதி விசாரணைக்கு வந்தன.. காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி அமர்வானது, கள்ளச்சாராய விஷ சாராய மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “சமுதாயத்தில் எந்த மாதிரியான பிரச்சனைகள், தீங்குகள் மதுவால் ஏற்படும் என்பதற்கு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவங்கள் ஒரு எச்சரிக்கை மணியாக உள்ளது. காவல்துறையினருக்கு தெரியாமல் கள்ளச்சாராய மரணங்கள் நடந்தது என்பதை ஏற்க முடியவில்லை… மாநில போலீசார் கண்டும் காணமாலும் இருந்துள்ளதை இச்சம்பவம் தெளிவாக்கிறது
அதேவேளையில் காவல்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெற்றது தவறு என குறிப்பிட்டு, சிபிசிஐடி விசாரணை ஆவணங்கள் அனைத்தையும் சிபிஐ வசம் வழங்க வேண்டும், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தீர்ப்பு வழங்கியுள்ளனர்.