திருப்பூர் மாவட்டம் அவினாசி பக்கம் உள்ள வேலாயுதம்பாளையம் ஊராட்சி காசி கவுண்டம் புதூர், தாமரை கார்டன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் ( வயது 45 )இவர் அந்த பகுதியில் 4 சக்கர வாகனங்கள் வாங்கி விற்பனை செய்யும் ” கன்சல்டிங் ” தொழில் செய்து வந்தார் . இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ரமேஷ் தினமும் காலையில் நடை பயிற்சி செல்வது வழக்கம். அதன்படி நேற்று அதிகாலை நடை பயிற்சிக்காக வீட்டில் இருந்து புறப்பட்டு கோவை – சேலம் 6 வழிச்சாலையில் மங்கலம் புறவழிச்சாலை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமிகள் திடீரென்று ரமேசை சுற்றி வளைத்து தாங்கள் கொண்டு வந்த பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர் . அவரது உடலில் பல இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவிநாசி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரமேசை மீட்டு அவிநாசிஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலே ரமேஷ் பரிதாபமாக இறந்தார் . அவிநாசி போலீசார் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். மேலும் கொலையாளிகள் யார் ? தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்ததா ? அல்லது வேறு எதுவும் முன்விரோதம் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள் மர்ம ஆசாமிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்..
அதிகாலையில் நடைப் பயிற்சிக்கு சென்ற திருப்பூர் தொழில் அதிபர் வெட்டி படுகொலை – மர்ம ஆசாமிகள் வெறிச்செயல்.!!
