தமிழக ரேஷன் அரிசிக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு உள்ளதால் ரேஷன் அரிசி கடத்துவது அதிகரித்து வருகிறது. எனவே ரேசன் அரிசி கடத்தலை தடுக்க மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் குடிமை பொருள் பறக்கும் படை மற்றும் காவல் துறையின் குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். கோவையில் இருந்து கேரளாவிற்கு வாளையார், வேலாந்த வளம், மேல் பாவிமுள்ளி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், செம்மணாம்பதி ,வீரப்ப கவுண்டன்புதூர். நடுப்புணி,ஜமீன் காளியாபுரம் வடக்காடு உள்பட பல்வேறு சோதனை சாவடிகள் வழியாக ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் மற்றும் வழங்கல் துறையினர் அவ்வப்போது சோதனை நடத்தி ரேஷன் அரிசி கடத்துபவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர் .இந்த ஆண்டு இதுவரை 187 டன் அதாவது 1 லட்சத்து 87 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறியதாவது:- கோவை வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க ரோந்து மற்றும் வாகன சோதனை பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை கேரளாவிற்கு கடத்த முயன்ற 1 லட்சத்து 87 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி மற்றும் 233 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.