கோவை போத்தனூர்,செட்டிபாளையம் ரோட்டில் உள்ள அன்பு நகரை சேர்ந்தவர் கேபிரியல் ஆண்டனி ( வயது 35) முன்னாள் ராணுவ வீரர். இவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் போத்தலூரில் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வருகிறேன் .இதற்கி டையே எனக்கு வெங்காயம் விற்பனை வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதற்காக வெங்காயத்தை மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்யலாம் என திட்டமிட்டு அதற்கான விவரங்களை “யூடியூப்” மூலம் திரட்டி வந்தேன். அப்போது யூடியூப்பில் வெங்காயம் கொள்முதல் மற்றும் விற்பனை தொடர்பாக ஒரு வீடியோவை பார்த்தேன். அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்த செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன். இதில் அந்த நபர் தான் மராட்டிய மாநிலம் நாசிக் பகுதியில் வசித்து வருவதாகவும் தனது பெயர் சித்திரை பழம் என்றும் தெரிவித்தார் . மேலும் தனக்கு தெரிந்த .டிரேடிங் நிறுவனம் மூலம் குறைந்த விலைக்கு வெங்காயம் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பி நான் அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் பல்வேறு தவணைகளாக ரூ. 15 லட்சம் பணம் அனுப்பினேன். பணத்தைப் பெற்றுக் கொண்ட அவர் கூறியபடி வெங்காயத்தை கொள்முதல் செய்து தரவில்லை. மேலும் அவரை தொடர்பு கொண்டபோது முறையாக பதில் அளிக்கவில்லை. மேலும் எனது பணத்தை திருப்பித் தராமல் மோசடி செய்து விட்டார் .இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த சித்திரைபழம் ( வயது 58) என்பவரை நேற்று கைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில் அஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்..