போதை மறுவாழ்வு மையத்தில் சிறுவன் திடீர் மாயம் – திருநங்கை மீது புகார்..!

கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன். பிளஸ் 2 வரை படித்துள்ளார். அதன் பிறகு அவர் மேற்படிப்பு படிக்கவில்லை. இந்த நிலையில் அந்த சிறுவனுக்கு அதே பகுதியை சேர்ந்த திருநங்கையுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததுடன் நேரில் சந்தித்து பல இடங்களுக்கு சென்று வந்தனர். இதற்கிடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிறுவன் திடீரென்று மாயமானார் .பல இடங்களில் தேடியும் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அந்த சிறுவன் சில நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்தான். அப்போது அவன் மது மற்றும் புகைபழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் திருப்பூரில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர் . அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த மாதம் 31ஆம் தேதி நண்பரை பார்த்து விட்டு வருவதாக கூறி சென்ற சிறுவன் திரும்பவில்லை .இது தொடர்பாக மாறுவாழ்வு மையப் பொறுப்பாளர்கள் சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே பெற்றோர்கள் சிறுவனின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது “ஸ்விட்ச் ஆப் ” செய்யப்பட்டிருந்தது. பல இடங்களில் தேடியும் அவன் கிடைக்கவில்லை. இது குறித்து சிறுவனின் பெற்றோர் போத்தனூர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதில் திருநங்கையுடன் பழகி வீட்டை விட்டு சென்ற தங்களது மகன் சில நாட்களுக்கு முன்புதான் வீடு திரும்பினார். தற்போது அவனை மீண்டும் காணவில்லை. அவன் அந்த திருநங்கையுடன் சென்று இருக்க வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.