டெல்லி: 8ஆவது சம்பள கமிஷன் மூலம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வு தொகை 186 சதவீதம் உயரும் என தகவல் வெளியாகி உள்ளது. 8ஆவது சம்பள கமிஷனானது 2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளமும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகையும் உயர இருக்கிறது. இந்த 8ஆவது சம்பள கமிஷனின் மூலம் 1 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைய இருக்கின்றனர்.
7ஆவது சம்பள கமிஷன் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இதன்படி மத்திய அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை ஓய்வூதிய தொகையாக மாதத்திற்கு 9 ,000 ரூபாயும், அதிகபட்ச ஓய்வூதிய தொகையாக மாதத்திற்கு 1.25 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து ஆண்டுதோறும் இவர்களுக்கான அகவிலைப்படி உயர்வும் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போதைக்கு அடிப்படை ஓய்வூதிய தொகையில் 53 சதவீதம் அகவிலைப்படியாக வழங்கப்படுகிறது. அதாவது ஒரு மாதத்திற்கு 10000 ரூபாய் ஓய்வூதிய தொகை வாங்கக்கூடிய நபர்கள் ,அகவிலை படியோடு சேர்த்து 15,300 ரூபாயாக வாங்கி வருகின்றனர். ஆண்டுதோறும் நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையிலும், பண வீக்கத்தின் அடிப்படையிலும் அகவிலைப்படியானது மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
தற்போது 8ஆவது ஊதியக்குழு நடைமுறைக்கு வந்தால் மத்திய அரசு ஊழியர்கள் சம்பளம், ஓய்வூதியதாரர்களின் ஓய்வுத்தொகை கணிசமாக உயரும் என சொல்லப்படுகிறது.. National Council of the Joint Consultative Machinery அளித்த பரிந்துரையான fitment factor 2.86 என்பதன் அடிப்படையில் சம்பளமும் ஓய்வூதியமும் உயர்த்தப்பட உள்ளது.
ஃபிட்மன்ட் ஃபேக்டர் (fitment factor)என்பது அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகை ஆகியவற்றை பெருக்குவதற்காக பயன்படுத்தப்படும் ஒரு காரணியாகும். ஏழாவது ஊதியக்குழுவினை பொருத்தவரை ஃபிட்மன்ட் ஃபேக்டர் 2.57ஐ பயன்படுத்தியது.