தைப் பூசம்… பழனி முருகன் கோவிலில் அலைமோதும் கூட்டம் – பழனி பாத யாத்திரை பக்தர்களுக்கான முக்கிய அறிவிப்பு.!

திண்டுக்கல்: தைப்பூசத்தை முன்னிட்டு பழனிக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மலைக்கோவிலுக்கு பக்தர்கள் செல்லும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (30.01.2025) ஒரு நாள் மட்டும் பக்தர்கள் பயன்பாட்டுக்கு இயங்காது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளியூர்களிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருகின்றனர்.

இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் சேவை வழியாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில், தைப்பூசத்தை முன்னிட்டு பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள் வருகை தொடங்கியுள்ளது.

இதனையடுத்து, மதுரை, சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்கள் கம்பம், வத்தலகுண்டு, நத்தம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் செம்பட்டி வழியாக பாதயாத்திரையாக சென்று கொண்டு உள்ளனர்.

இதேபோல், நத்தம் வழியாக, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டையைச் சேர்ந்த பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் ரோப் கார் வழியாக மலைக் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

யானை பாதை படிப்பாதை வழியாக கால்நடையாகவும் மின் இழுவை ரயில் வழியாக சுமார் பத்து நிமிடத்திலும் மலைக் கோவிலுக்கு செல்லலாம். ஆனால் பெரும்பான்மையான பக்தர்கள் மலைக் கோவிலுக்கு எளிதில் சென்று வர ரோப் கார் சேவையை விரும்புகின்றனர். ரோப் கார் மூலம் மூன்று நிமிடத்தில் மலைக் கோயிலுக்கு சென்று வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்தரத்தில் பயணித்தவாறு பழனி மற்றும் கொடைக்கானல் மலைகளின் அழகை ரசித்தவாறும் வயல்வெளிகளை பார்த்தவாறு பயணிப்பது பக்தர்களுக்கு புது புத்துணர்ச்சியை கொடுக்கும். இதனால் பண்டிகைக் காலங்கள் மட்டுமல்லாது, சாதாரண நாட்களில் கூட ரோப் கார் மையத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படும். இந்நிலையில் ரோப் கார் சேவை மாதத்திற்கு ஒரு நாளும், வருடத்திற்கு ஒரு மாதமும் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் பக்தர்கள் செல்லும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை 30.01.2025 ஒரு நாள் மட்டும் பக்தர்கள் பயன்பாட்டுக்கு இயங்காது என கோவில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். மலைக் கோவிலுக்கு தரிசனத்துக்காக வரும் முருக பக்தர்கள் மின் இழுவை ரயில், மற்றும் படிப்பாதை,யானை பாதையை பயன்படுத்திக் சென்று சாமி தரிசனம் செய்து கொள்ள கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தற்போது பக்தர்கள் மலைக் கோவிலுக்கு மேலே ஏறுவதற்கு யானை பாதையும் கீழே இறங்குவதற்கு படிப்பாதையும் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவில் அடிவாரம் மற்றும் பிற பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் குழுவாக பக்தர்கள் மலைக்கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வரும் காலங்களில் கூட்டம் இன்னும் அதிகரிக்கும் என்பதால் அடிவாரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். நாளை ரோப் கார் சேவையும் இயங்காது என்பதால் மின் இழுவை ரயில் நிலையத்தில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை அடுத்து கூட்ட நெரிசலை தவிர்க்க பழனி தேவஸ்தானத்தின் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது..