ராமநாதபுரம் அருகே போலிசார் நடத்திய வாகன சோதனையின் போது விற்பனைக்காக காரில் எடுத்து வரப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் உமிழ் நீர் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு காரில் வந்த ஆறு பேரை கைது செய்து மேல் விசாரணைக்காக வனத்துறை அதிகிரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ்க்கு மதுரையை சேர்ந்த சிலர் அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் உமிழ்நீரை ஆன்லைனில் விற்பனை செய்வதாகவும்,அதனை ராமநாதபுரத்தை சேர்ந்த சிலர் வாங்க இருப்பதாகவும் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சட்டவிரோதமாக திமிங்கலத்தின் உமிழ்நீரை விற்பனை செய்யும் கும்பலை பிடிப்பதற்காக போலீசார் திமிங்கலத்தின் உமிழ்நீரை வாங்க தயாராக இருப்பதாக ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து அதற்கு முன் பணத்தை செலுத்தி அந்த கும்பலை ராமநாதபுரத்திற்கு வரவழைத்தனர்.
இதனிடையை காரில் வரும் இந்த கும்பலை பிடிப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் அடுத்த மேலக்கோட்டை விலக்கு பகுதியில் கேணிக்கரை போலீசார் நேற்று இரவு வாகன சோதனை ஈடுபட்டனர்.
அப்போது இன்று அதிகாலை மதுரை சேர்ந்த சொகுசு கார் ஒன்று அவ்வழியாக வந்தது, அந்த காரை சோதனை செய்ய நிறுத்திய போது காரில் வந்த நபர்கள் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றனர்.
தப்பியோடியவர்களை மடக்கி பிடித்து அவர்களிடம் விசாரணை செய்த போது அதில் ராமநாதபுரம் மதுரை மற்றும் தேனியைச் சேர்ந்த ராஜன், ஜெயக்குமார், ஜெகதீஷ், சாகுல் ஹமீது, சுபாஷ் பாபு, ராஜலிங்கம் ஆகிய ஆறு பேர் இருந்தது தெரிய வந்தது.
இவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் உமிழ் நீரை விற்பனைக்காக காரில் எடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து காரில் இருந்த ரூ.4 கோடி மதிப்பிலான சுமார் 4 கிலோ எடை கொண்ட திமிங்கலத்தின் உமிழ் நீர் பறிமுதல் செய்த போலீசர் காரில் வந்த ஆறு பேரையும் கைது செய்து கேணிக்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தி பின்னர் ராமநாதபுரத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் மேல்விசாரணைக்காக ஒப்படைத்தனர்.
தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள திமிங்கலத்தின் உமிழ்நீர் உண்மையானது தானா என்பது குறித்து பரிசோதனை செய்வதற்காக உமிழ்நீரின் மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆய்வகத்தின் முடிவின் அடிப்படையில் உமிழ் நீர் தான் என உறுதி செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.