சூலூர் குடோனில் பதுக்கிய 5 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் – 3 பேர் கைது..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஒரு குடோனில் எரிசாரயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் கோவை மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் சூலூர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நேற்றுஅதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது பாப்பம்பட்டியில் உள்ள ஸ்ரீ நகரில் இருக்கும் ஜெயப்பிரகாஷ் தறிக் குடோனில் ஆய்வு செய்தனர். அங்கு தலா 35 லிட்டர் கொண்ட 147 கேன்களில் 5,145 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதுஅந்த குடோனில் இருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கேரள மாநிலம்,கொல்லம் மாவட்டம் , கல்லாரா பகுதியைச் சேர்ந்த டிரைவர் ரஜித்குமார் ( வயது 38 )பாப்பம்பட்டி ஸ்ரீநகர், பவுண்டரி மெஷின் ஆபரேட்டர் ஜான் விக்டர் ( வயது 45)கோவை ஒண்டிபுதூர், சவுடேஸ்வரி நகர்ரியல் எஸ்டேட் அதிபர் பிரபாகரன் ( வயது 47) என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து எரிசாராயத்தை கடத்தி வந்து இந்த தறி குடோனில் பதுக்கி வைத்திருப்பதும், பின்னர் அவற்றை இரவு நேரத்தில் கேரளாவுக்கு கடத்திச் செல்ல திட்டமிட்டு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ரஜித்குமார், ஜான் விக்டர், பிரபாகர் ஆகியோரை கைது செய்தனர். குடோனில் பதுக்கி வைத்திருந்த 5 ஆயிரத்து 145 லிட்டர் எரிசாராயம் மற்றும் கேரள பதிவு எண் கொண்ட ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.