சூலூரில் இன்ஸ்டாகிராமில் பழகி கல்லூரி மாணவரிடம் நகையை கொள்ளையடித்த இளம்பெண் உட்பட 4 பேர் கைது..!

கோவை சூலூர் பகுதியில் தங்கியிருந்து தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவருடன் இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் பழகினார். பின்னர் அவரை ஆசை வார்த்தை காட்டி குறிப்பிட்ட இடத்துக்கு வருமாறு அந்த பெண் அழைத்துள்ளார். இதை நம்பி அந்த மாணவரும் அங்கு சென்றார் .அப்போது அந்தப் பெண் உட்பட 4 பேர் அங்கு நின்று கொண்டிருந்தனர். அவர்கள் அந்த மாணவரை தாக்கி அவரிடம் இருந்து 2 பவுன் செயினை பறித்து சென்று விட்டனர். இது குறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த லாவண்யா ( வயது 23) கிறிஸ்டோபர் ( வயது 21) கமலேஷ் ( வயது 21) ராமநாதன் ( வயது 20) ஆகிய 4 பேர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 பவுன் செயின் மீட்கப்பட்டது.