பறவைகள் பூங்காவாக மாறுகிறது வ.உ.சி உயிரியல் பூங்கா – கோவை மாநகராட்சி முடிவு.!!

கோவை வ. உ . சி . உயிரியல் பூங்கா 1965 ஆம் ஆண்டு 4.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டது. இங்கு சிங்கம், புலி கரடி உள்ளிட்ட விலங்குகளும் வெளிநாட்டு பறவைகள் , பாம்புகள் ,புள்ளி மான்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் இருந்தன .அப்போது சிங்கம் புலி ஆகியவற்றை ஜோடியாக பராமரிக்காமல் தனித்தனியாக கூண்டில்அடைத்தனர். எனவே அவற்றை வண்டலூரில் உள்ள மிருகக்காட்சி சாலைக்கு அனுப்பி வைக்க மத்திய விலங்கியல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி சிங்கம், புலி ஆகிய அனுப்பி வைக்கப்பட்டன .இதை யடுத்து மத்திய விலங்கியல் ஆணையம் வ. உ .சி பூங்காவுக்கான அனுமதியை 2018 – ஆம் ஆண்டு ரத்து செய்தது .2022 ஆம் ஆண்டு முதல் உயிரியல் பூங்கா மூடப்பட்டது . அங்கிருந்த கடமான், புள்ளிமான் உள்ளிட்ட விலங்குகள் சிறுவாணி வனப்பகுதியில் விடப்பட்டது .இந்த நிலையில் வ உ சி பூங்காவை ரூ.75 லட்சம் செலவில் மாநகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது..இங்கு தற்போது மயில், வாத்து, புறா ,லவ் பேர்ட்ஸ் உள்ளிட்ட பறவைகள் பராமரிக்கப்படுகிறது. ஆனால் ஏராளமான கூண்டுகள் காலியாக கிடக்கின்றன. இதையடுத்து வ உ சி உயிரியல் பூங்காவை பறவைகள் பூங்காவாக மாற்ற அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- திருச்சியில் பறவைகள் பூங்கா தொடங்கப்பட்டிருப்பது போல கோவை வ. உ . சி. உயிரியல் பூங்காவை பறவைகள் பூங்காவாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு பறவைகள், வண்ணக்கிளிகள் அபூர்வ பறவைகள் ஏராளமாக வரவழைக்கப்பட்டு பூங்கா புனரமைக்கப்பட உள்ளது. இதற்கான திட்ட வரைவுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன .அரசின் ஒப்புதல் பெற்று நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கும் என்றனர். பறவைகள் பூங்காவாக மாறினால் அனைத்து தரப்பினரும் வந்து பார்த்து செல்லும். சுற்றுலா மையமாகவ உ சி உயிரியல் மையம் திகழும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.