திருப்பூர் மாவட்டம் பல்லடம் செந்தோட்டம் பகுதியை சேர்ந்த தம்பதி ஸ்ரீதர்,கிருத்திகா.இவர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான காரில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வந்து விட்டு மீண்டும் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி மற்றொரு காரில் கணவன்,மனைவி மற்றும் இரு குழந்தைகளும் வந்து கொண்டிருந்துள்ளனர்.
அப்போது,குருக்கிலியம்பாளையம் பேருந்து நிலையம் அருகே வரும் போது எதிர்பாராத விதமாக இரு கார்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் கார்கள் பலத்த சேதமடைந்துள்ளன.இவ்விபத்தில் பல்லடத்தை சேர்ந்த தம்பதிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.மற்றொரு காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
அப்போது,நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து விட்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் சாலை வழியாக மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கோவைக்கு திரும்பிக்கொண்டு இருந்துள்ளார்.
விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை கண்ட அமைச்சர் செந்தில்பாலாஜி உடனடியாக அவர்களை மீட்டு தனது பாதுகாப்பு வாகனத்தில் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அவர்களுடன் அன்னூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட திமுகவினரையும் அனுப்பி வைத்தார்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்,இச்சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்னூர் அருகே விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.