வாஷிங்டன்: அமெரிக்கா சார்பில் வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் நிதி உதவியை டொனால்ட் டிரம்ப் அதிபரானதும் நிறுத்தினார்.
இப்படியான சூழலில் தான் தற்போது திடீரென்று டொனால்ட் டிரம்ப் மனம்மாறி பாகிஸ்தானுக்கு கோடிகளை கொட்டி கொடுத்துள்ளார். ஒரே நேரத்தில் ரூ.3,461 கோடியை டொனால்ட் டிரம்ப் அள்ளி வழங்கி உள்ளார். இது நம் நாட்டுக்கு பெரும் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.
உலகின் பெரிய வல்லரசு நாடாக அமெரிக்கா உள்ளது. இந்த நாடு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் பல ஆயிரம் கோடிகளை கொடுத்து உதவி செய்து வருகிறது. ஆனால் சமீபத்தில் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு நிலைமை மொத்தமாக மாறியது.
அமெரிக்காவின் USAID சார்பில் வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் நிதியை அதிரடியாக நிறுத்தினார். இதனால் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் உள்பட 100க்கும் அதிகமான நாடுகளில் பல்வேறு பணிகளுக்கான நிதி என்பது நிறுத்தப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் தான் தற்போது டொனால்ட் டிரம்ப் திடீரென்று மனம் மாறியுள்ளார். அதோடு பாகிஸ்தானுக்கு பல ஆயிரம் கோடிகளை அள்ளி கொடுத்துள்ளார்.
இது நம் நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நம் அண்டை நாடாக பாகிஸ்தான் உள்ளது. பயங்கரவாதத்தை இந்த நாடு ஊக்குவித்து வருகிறது. குறிப்பாக காஷ்மீருக்கு உரிமை கொண்டாட நம் நாட்டுக்கு எதிராக பயங்கரவாதிகளை வைத்து பாகிஸ்தான் சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இப்படியான சூழலில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென்று பாகிஸ்தானுக்கு 397 மில்லியன் அமெரிக்கா டாலர்களை வாரி வழங்க ஒப்புதல் அளித்துள்ளார். இதன் இந்திய மதிப்பு என்பது ரூ.3,461 கோடியாகும்.
அதாவது பாகிஸ்தான் அமெரிக்காவின் எஃப் 16 ரக போர் விமானங்களை பயன்படுத்தி வருகிறது. இது 4ம் தலைமுறையை சேர்ந்த மல்டி ரோல் விமானமாகும். அனைத்து வானிலை காலநிலைகளிலும் இந்த விமானத்தால் பறக்க முடியும். இநத விமானத்தை அமெரிக்காவின் லாக்ஹிட் மார்ட்டின் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த எஃப் 16 ரக விமானத்தின் பராமரிப்புக்காக தான் இப்போது டொனால்ட் டிரம்ப் ரூ.3,461 கோடியை வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த நிதி என்பது முக்கிய கண்டிஷனுடன் வழங்கப்பட்டுள்ளது. அதாவது பாகிஸ்தானில் பயங்கரவாத செயல்களுக்கு எதிரான செயல்பாட்டுக்கு தான் எஃப் 16 ரக போர் விமானங்களை பயன்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. மாறாக இந்தியா உள்பட எந்த நாட்டுக்கும் எதிரான தாக்குதலுக்கு இந்த போர் விமானங்களை பயன்படுத்த கூடாது என்று கண்டிஷன் போட்டுள்ளது. இது நம் நாட்டுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.
ஆனாலும் கூட அமெரிக்காவின் கண்டிஷனை பாகிஸ்தான் பின்பற்றுமா? என்பது தான் இங்கே கேள்வியாக உள்ளது. ஏனென்றால் அமெரிக்காவின்எஃப் 16 ரக போர் விமானங்களை எந்த காரணம் கொண்டும் இந்தியா மீது தாக்குதல் நடத்த பயன்படுத்த கூடாது என்று அமெரிக்கா கூறியிருந்தது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டில் காஷ்மீரின் பாலகோட்டில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் நம் நாட்டு படை வீரர்களின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 40க்கும் அதிகமானவர்கள் பலியானார்கள்.
அதன்பிறகு இருநாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டது. அப்போது அமெரிக்காவின் கண்டிஷனையும் மீறி பாகிஸ்தான் எஃப் 16 ரக போர் விமானங்களை நம் நாட்டின் எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே பறக்கவிட்டு மிரட்டியது. அதுமட்டுமின்றி அந்த விமானத்தில் இருந்து ஏவப்பட்ட AIM -120 AMRAAM ஏவுகணையையும் இந்தியா ஆதாரமாக வைத்து பாகிஸ்தானுக்கு எதிராக பகிரங்கமாக குற்றம்சாட்டியது.
இது அமெரிக்கா – பாகிஸ்தான் இடையேயான ஒப்பந்தத்தை மீறும் வகையில் இருந்தது. இதையடுத்து அப்போதைய அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரியா தாம்சன் பாகிஸ்தானை சாடியிருந்தார். இப்படியான சூழலில் தான் தற்போது மீண்டும் பாகிஸ்தானின் எஃப் 16 ரக போர் விமான பராமரிப்புக்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
ரூ.3,461 கோடியை வாரி இறைத்துள்ளார். டொனால்ட் டிரம்பின் இந்த செயலால் மீண்டும் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் அமெரிக்காவின் ஒப்பந்தத்தை மீறி எஃப் 16 ரக போர் விமானங்களை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்துமோ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதேபோல் பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு துறை சார்ந்து அமெரிக்கா நிதி வழங்குவது இது முதல் முறையல்ல. அமெரிக்க அதிபராக இருந்த ஜோ பைடனும் நிதி வழங்கி இருந்தார். அதற்கு முன்பு டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக ஏற்கனவே 4 ஆண்டுகள் செயல்பட்டார். அந்த சமயத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருந்தது. கடந்த 2018 ம் ஆண்டில் அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்தபோது பாகிஸ்தானுக்கான ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறை சார்ந்த உதவிகளை நிறுத்தி வைத்தார். தாலிபான் மற்றும் ஹக்கானி நெட்வொர்க் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி நிதியை நிறுத்தினார். அதன்பிறகு 2019ல் டிரம்பும் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் சந்தித்தனர். அதன்பிறகு பாகிஸ்தானுக்கு டொனால்ட் டிரம்ப் 125 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.