கோவை – மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள வனக்கல்லூரி வளாகத்தில் மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மர பெருக்கு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வனத்துறைக்கான எம்டிஎஸ் துறையில் டெக்னீசியன், டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்த முடிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கான எழுத்து தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 8 மற்றும் 9ம் தேதி கோவையில் நடந்தது. அப்போது தேர்வு எழுத வந்தவர்களின் போட்டோ மற்றும் கைரேகை ஆகியவை பதிவு செய்யப்பட்டன.
எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. அப்போது தேர்வு எழுதிய 8 பேரில் போட்டோ மற்றும் கைரேகையும், நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்களின் போட்டோ, கைரேகையும், மாறுபட்டு இருந்தது. இது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.அதிகாரிகள் விசாரித்ததில் அவர்கள் 8 பேரும் ஆள்மாறாட்டம் செய்து தங்களது பெயரில் வேறொருவரை வைத்து தேர்வு எழுதியது தெரிய வந்தது.
இதுகுறித்து மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் இயக்குனர் குனிக்கண்ணன் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ரிஷி குமார் (26), பிபன் குமார் (26), பிரசாந்த் சிங் (26), ராஜஸ்தானை சேர்ந்த லோகேஷ் மீனா (24), அசோக் குமார் மீனா (26), அரியானாவை சேர்ந்த
சுப்ராம் (26), உத்தர பிரதேசத்தை சேர்ந்த நரேந்திர குமார் (24), பீகாரை சேர்ந்த ராஜன் கார் காண்ட் (21) ஆகிய 8 பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இவர்களுக்கு உதவியது யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
மத்திய அரசு பணி தேர்வில் ஆள் மாறாட்டம் – கோவையில் வடமாநிலத்தைச் சேர்ந்த 8 பேர் கைது..!
