பொள்ளாச்சியில் அக்காவிடம் பிரம்பை கொடுத்து தம்பியை அடிக்க வைத்த தலைமை ஆசிரியை- அரசு பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 8 வயது சிறுவன் 3-ம் வகுப்பு படித்து வருகிறான்.அதே பள்ளியில் அவனது அக்காள் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். இதற்கிடையில் நேற்று முன் தினம் பள்ளி முடிந்து சிறுவன் வீட்டிற்கு சென்றான். அப்போது பெற்றோரிடம் உடல் வலிப்பதாக கூறி கதறி அழுதான். இதையடுத்து பெற்றோர் தனது மகனின் உடலில் பார்த்த போது பலஇடங்களில் காயங்கள் இருந்தது. இது குறித்து கேட்டதற்கு பள்ளி தலைமை ஆசிரியை கூறி தன்னை அக்காள் அடித்ததாக கூறினான்.இது கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் நேற்று காலை பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியையிடம் கேட்டனர். .இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 3-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் வகுப்பில் சக மாணவர்களுடன் விளையாடி சண்டை போட்டதாக தெரிகிறது. இது குறித்து வகுப்பு ஆசிரியை தலைமை ஆசிரியையிடம் தெரிவித்தார். இதையடுத்து அவர் அந்த சிறுவனை அழைத்து முட்டி போட வைத்ததாகவும், சிறுவனின் அக்காவிடம் பிரம்பை கொடுத்து அடிக்க சொல்லி கட்டாயப்படுத்தியதும் தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சமூக நலத்துறை அதிகாரிகள்பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் சம்பந்தப்பட்ட சிறுவன் அவனது அக்காவிடம் விசாரித்தனர் .மேலும் கல்வித்துறை அதிகாரிகளும் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

இது குறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:- இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணைக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இந்த சம்பவம்பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..