டாஸ்மாக்கில் 1000 கோடிக்கு மேல் முறைகேடு – அமலாக்கத்துறை குற்றச்சாட்டு..!

டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ1000 கோடிக்கு மேல் முறைகேடுகள் நடந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உட்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் மற்றும் பெருமளவு ரொக்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக சொல்லப்பட்டது. அதேபோல், திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான ஆலை தயாரிப்பு நிறுவனம் உட்பட மொத்தம் 25 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த அமலாக்கத்துறை சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது டாஸ்மாக் நிறுவனத்தில், ரூ1000 கோடிக்கு மேலாக முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, தமிழ்நாட்டில், மது ஆலைகளில் இருந்து மதுபானங்களை கொள்முதல் செய்து, மாநிலம் முழுதும் உள்ள, 4,830 சில்லரை மதுக்கடைகளுக்கு வினியோகம் செய்யும் வகையில், டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த டாஸ்மாக் நிறுவனம், தமிழகத்தில் மது விற்பனையின் மூலம், தினமும், 150 கோடி ரூபாய்க்கு மேலாக வருமானம் வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதேபோல் பண்டிகை காலங்களில் இந்த விற்பனையின் அளவு மேலும் அதிகரிக்கும் என்ற நிலையில், பண்டிகை நாட்களில் டாஸ்மாக் விற்பனை தொடர்பான தகவல்கள் வெளியாவது வழக்கம். ஆனால் தற்போது டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.

இது குறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது பல்வேறு தனியார் நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது. சோதனையில் ரூ.1000 கோடி கணக்கில் வராதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுபானம் கொள்முதல் மூலம் தனியார் மதுபான நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன. திட்டமிட்டு செலவுகளை அதிகப்படுத்தியும் விற்பனை புள்ளி விவரங்களை உயர்த்தியும் முறைகேடு நடைபெற்றுள்ளது. முறைகேட்டில் மதுபான தயாரிப்பு நிறுவனங்கள், பிற முக்கிய கூட்டாளிகள் பங்கு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் போக்குவரத்து ஒப்பந்தத்தில் முறைகேடு கண்டறியப்பட்டுள்ளது.

உரிய ஆவணங்கள் இல்லாத நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் உயர் அதிகாரிகள் மதுபான நிறுவனங்கள் இடையே நேரடி தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளது. உயர் அதிகாரிகளின் நெருக்கமானவர்களுக்கே ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளது. முறையான விவரங்கள் இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு, முறையான கேஒய்சி, பான் விவரங்கள் இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு கூட பார் உரிம டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, கட்டடம் உட்கட்டமைப்பு ஆகியவற்றிலும் ஊழல் நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.