சென்னை: ஏசி பேருந்துகளிலும் விருப்பம்போல பயணிக்க ரூ.2,000 பயண அட்டையை மாநகர போக்குவரத்து கழகம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாநகர போக்குவரத்து கழகத்தின்கீழ் 50 குளிர்சாதன (ஏசி) பேருந்துகள் உட்பட 3.056 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், ஏசி தவிர்த்து மற்ற பேருந்துகளில் பயணிக்க ரூ.320 முதல் ரூ.1,000 வரை கட்டணம் உள்ள பயண அட்டைகள் வழங்கப்படுகின்றன. ரூ.1,000 பயண அட்டை பெறுவோர் ஏசி தவிர்த்து மற்ற அனைத்து பேருந்துகளிலும் விருப்பம்போல பயணிக்கலாம்.
மாநகர போக்குவரத்து கழகம் 225 ஏசி பேருந்துகள் உட்பட 650 மின்சார பேருந்துகளை விரைவில் கொள்முதல் செய்ய உள்ளது. ஏசி பேருந்துகளை மே மாதம் முதல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோடை வெப்பமும் அதிகரித்து வருவதால், பலரும் ஏசி பேருந்துகளில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுவார்கள்.
இதை கருத்தில் கொண்டு, ஏசி பேருந்து உட்பட அனைத்து வகை பேருந்துகளிலும் விருப்பம்போல பயணிக்கும் வகையில் ரூ.2,000 கட்டணம் கொண்ட பயண அட்டையை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது திருப்போரூர், சிறுசேரி டெக் பார்க், கிளாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஏசி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புதிய பேருந்துகள் வந்ததும், தேவைக்கேற்ப பல்வேறு வழித்தடங்களிலும் இயக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.