இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளையராஜாவின் ஸ்டுடியோவிற்கு நேரில் சென்று நினைவுப்பரிசு வழங்கி சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக வாழ்த்து தெரிவித்தார். அதிமுக, காங்கிரஸ், விசிக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரைபிரபலங்களும் இளையராஜாவிற்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
அதன்பின்னர் இளையராஜா தான் இசையமைத்த சிம்பொனி இசையை லண்டனில் கடந்த 8 ஆம் தேதி அரங்கேற்றம் செய்து ஆசியாவின் முதல் சிம்பொனி கலைஞர் என்ற சாதனையை படைத்தார்.
சிம்பொனி இசை அரங்கேற்றத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசு சார்பில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று இளையராஜாவிற்கு மாலை அணிவித்து வரவேற்றார். பாஜக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், திரையுலகினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிலையில், சிம்பொனி இசை நிகழ்ச்சிக்கு வாழ்த்தி வழியனுப்பி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இளையராஜா நன்றி தெரிவித்தார். அப்போது, இளையராஜாவுடன் இணைந்து சிம்பொனியை அரங்கேற்றிய ராயல் பில் ஹார்மோனிக் இசைக் குழுவினர் குறித்து முதலமைச்சர் ஆவலுடன் கேட்டறிந்தார்.
இந்த சந்திப்பின் போது முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரும் உடனிருந்தனர். இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோவுடன் பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
அதில், இளையராஜாவின் அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறப்பாக நடைபெறும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் செய்த இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.