5,000 டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பு.!

டுத்த ஒரு வாரத்தில் 5ஆயிரம் டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடக்கும் என்றும்; செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யும் வரை பாஜக தொடர்ந்து போராடும் எனவும் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறுகையில், ”டெல்லியிலும் சத்தீஷ்கரிலும் மதுபான ஊழல் நடந்தது. டெல்லி மதுபான ஊழலில், ஒரு புதிய மதுபானக்கொள்கையைக் கொண்டுவந்து, சில நிறுவனங்களுக்கு சலுகை கொடுக்கிறாங்க. அதை நாம் டெல்லி மதுபான ஊழல்னு சொல்றோம்.

சத்தீஷ்கரில், நம் டாஸ்மாக் மாதிரி, சத்தீஷ்கர் ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் லிமிடேட் என்று அவங்க வைச்சிருக்காங்க (CSML). சத்தீஷ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அவங்க அங்கு உருவாகிற சாராயத்தை மக்கள்கிட்ட கொண்டுபோறாங்க.

நம் தமிழ்நாட்டில் இருக்கும் டாஸ்மாக்கில் 3 விஷயங்களை நான் பார்க்கிறேன். டாஸ்மாக் நிறுவனத்துக்கு ஐந்தாயிரம் சில்லறை விற்பனைக் கடைகள் இருக்கு, எலைட் பார்ஸ் இருக்கு, fL2 லைசென்ஸ் இருக்கு, வேறு சில இடங்களுக்குக் கொடுக்கக் கூடிய தற்காலிக லைசென்ஸ் இருக்கு. இது ஒரு பகுதி. சாராயத்தை உருவாக்கக்கூடிய நிறுவனங்கள், இரண்டாவது பகுதி, 3ஆவது பாட்டிலிங் கம்பெனி. அவங்க ஒரு பாட்டிலை போட்டு, ஹாலோகிராம் ஸ்டிக்கரை ஒட்டி, டாஸ்மாக் நிறுவன கண்காணிப்பில் டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்களுக்குக் கொடுக்கிறாங்க.

தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1100 கோடிக்கு மேல் ஊழல் இருப்பதாகச் சொல்றாங்க. தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் இருக்கும் ஊழியர்களுக்கான அமைப்பு, 40 விழுக்காடு, டாஸ்மாக்கில் இருந்து விற்கப்படும் சாராயம், முறையாக வரக்கூடிய பாதையில் வரவில்லை; வேறு வழியில் வருகிறது எனச் சொல்கிறது.

அமலாக்கத்துறையைப் பொறுத்தவரை ஏன் ரெய்டு செய்தார்கள். மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை டாஸ்மாக் சம்பந்தமான பலவித எஃப்.ஐ.ஆரை போட்டு இருக்காங்க.

அந்த எஃப்.ஐ.ஆர் 3 இருக்கிறது. முதல் எஃப்.ஐ.ஆர். டாஸ்மாக் கடைகளில் ஒரு குவார்ட்டர் மதுவுக்கு ரூ.10ல் இருந்து ரூ.30 அதிகமாக வாங்குறாங்க என்கிற எஃப்.ஐ.ஆர். டாஸ்மாக் அதிகாரிகள் யாரிடம் சாராயம் வாங்கவேண்டும் என்பதை மது ஆலை அதிபர்களிடம் பேசி முறையற்று வாங்குகின்றனர். அது இரண்டாவது எஃப்.ஐ.ஆர்.

மூன்றாவது எஃப்.ஐ.ஆரில் டாஸ்மாக் கடைகளில் இருக்கும் ஊழியர்களை அதிகாரிகள் பணம் வாங்கிக்கொண்டு பணியிடமாற்றம் செய்றாங்க அப்படின்னு இருக்கு.

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போட்ட மூன்று எஃப்.ஐ.ஆரையும், அமலாக்கத்துறை கையில் எடுத்து, அதனை ஈ.சி.ஐ.ஆர்ன்னு பதிவு வழக்குப் பதிந்து விசாரணைக்கு வருகிறார்கள். அதாவது எஃப்.ஐ.ஆர். மாநில அரசு கொடுக்கிறது. ஈ.சி.ஐ.ஆர் என்பது அமலாக்கத்துறை பதியுறது. இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனைகள் செய்கிறார்கள்.

மதுபான ஆலைகள் சிலவற்றிலும், கரூர் செந்தில் பாலாஜியின் பினாமிக்குச் சொந்தமான ஆலைகளிலும், டாஸ்மாக் தலைமையிடம் மற்றும் குடோன்களில் ஐந்து நாட்களுக்கு சோதனை செய்து, ரூ.1100 கோடி ஊழல் நடந்ததை அமலாக்கத்துறை தெரிவிக்கிறாங்க. முதலில் டாஸ்மாக் பாட்டில்களை கொண்டு செல்லும் வாகனங்கள் மூலம் ரூ.100 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருக்கு எனச் சொல்றாங்க.

ஜெகத் ரட்சகனின் ஆலையில் நடந்த ரெய்டில், கணக்கு சரியாக காட்டாமல், அதிகப் பொருட்களுக்கு கொள்முதல் செய்ததாக மட்டும் ரூ.1000 கோடி ஊழல் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அடுத்து பாட்டில் நிறுவனங்கள் மூலம், ஊழல் நடந்திருக்கு.

அமலாக்கத்துறை சொன்னதில், டாஸ்மாக் விவகாரத்தில் நேரடியாக சில வழிகளில் பணத்தை வெளியில் எடுத்திருக்காங்க. சாராய ஆலைகள் குறைவான உற்பத்திச் செலவு பிடிக்கும் சாராயத்திற்கே அதிக செலவு காட்டி பணத்தை எடுத்திருக்காங்க. இதை சாராய ஆலைகளில் இருந்து வரும் கரண்ட் பில்லில் இருந்து கண்டுபிடிச்சிருக்கு, அமலாக்கத்துறை.

அமலாக்கத்துறை நேர்மையான முறையில் விசாரணை நடத்தனும். குறிப்பாக, செந்தில் பாலாஜியின் பெயிலை கேன்சல் செய்யனும்.

40 விழுக்காடு மதுபானங்கள் விற்பனைக் கணக்கில் வரவில்லை. மதுபான ஆலைகள் மட்டுமே முறைகேட்டில் ஈடுபட்டிருக்க முடியாது.

அடுத்த ஒரு வாரத்தில் 5ஆயிரம் டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடக்கும். செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யும் வரை பாஜக தொடர்ந்து போராடும்” என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.