பெங்களூர்: சட்டவிரோதமாகப் போதைப்பொருட்களைக் கடத்திய வெளிநாட்டைச் சேர்ந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரில் அவர்கள் போதைப்பொருளைக் கடத்த முயன்றபோது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்போது அவர்களிடம் ரூ.75 கோடி மதிப்புள்ள 37 கிலோ போதைப்பொருள் இருந்துள்ளது. கர்நாடகாவில் இதுவரை பிடிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தலில் இதுதான் மிகப் பெரியதாகும்.
இந்தியாவில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதைப்பொருள் நடமாட்டத்தைக் கண்காணித்து போதைப் பொருட்களைக் கடத்துவோரைக் கைது செய்யும் பணிகளில் போலீசார் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதற்கிடையே பெங்களூருக்கு போதைப் பொருள் கடத்தி வந்த இரு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து ரூ.75 கோடி மதிப்புள்ள 37 கிலோ போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இரு பெண்களும் நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் பம்பா ஃபான்டா (31) மற்றும் அபிகேல் அடோனிஸ் (30) என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. அவர்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு திரும்பியுள்ளனர். அவர்கள் எடுத்து வந்த டிராலியில் எம்டிஎம்ஏ போதைப்பொருள் இருந்த நிலையில், போலீசார் அவர்களைக் கைது செய்ததாக மங்களூரு காவல் ஆணையர் அனுபம் அகர்வால் தெரிவித்தார்.
மேலும், அவர்களிடமிருந்து நான்கு மொபைல் போன்கள், பாஸ்போர்ட்கள் மற்றும் ரூ.18,000 ரொக்கமும் மீட்கப்பட்டன. அவர்கள் டெல்லியில் வசித்து வந்துள்ளனர்.. இருவரும் சேர்ந்து நாடு முழுவதும் எம்டிஎம்ஏ கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் விமானம் மூலமாகவே நாடு முழுக்க போதைப் பொருட்களைக் கடத்தியதும் விசாரணையில் தெரிய வந்தது. அவர்கள் கடந்த ஒரே ஆண்டில் மட்டும் மும்பைக்கு சுமார் 37 முறையும் பெங்களூருக்கு 22 முறையும் சென்றுள்ளனர். அதுவே போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட ஃபான்டா கடந்த 2020ம் ஆண்டு பிஸ்னஸ் விசாவில் இந்தியா வந்துள்ளார். அதேநேரம் அடோனிஸ் கடந்த 2016ல் மருத்துவ விசாவில் இந்தியா வந்துள்ளார். அதன் பிறகு அவர் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இருவரும் கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மங்களூரு காவல் ஆணையர் அனுபம் அகர்வால் மேலும் கூறுகையில், “கடந்த ஆண்டு மங்களூருவில் உள்ள பம்ப்வெல் அருகே உள்ள ஒரு லாட்ஜில் போதைப்பொருள் கடத்தல்காரர் ஹைதர் அலி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ஹைதர் அலிக்கு போதைப்பொருள் சப்ளை செய்து வந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த பீட்டர் இகேடி பெலோன்வோ கைது செய்யப்பட்டார்.
அவர்களிடம் விசாரணையின் போதுதான் இந்த இரு பெண்கள் குறித்த தகவல் எங்களுக்குக் கிடைத்தது. இந்த இரண்டு பெண்களும் குறைந்தது 15 நாட்களுக்கு ஒரு முறை டெல்லியில் இருந்து பெங்களூர் வந்து சென்றுள்ளனர். எல்லா முறையும் இரவு 9.50 மணி விமானத்திலேயே வந்துள்ளனர். மறுநாளே அவர்கள் டெல்லி திரும்பியதும் தெரிய வந்துள்ளது. இப்படியே கடந்த ஆறு மாதங்களில் அவர்கள் பல முறை பெங்களூர் வந்துள்ளனர். இதன் காரணமாகவே அவர்கள் எங்கள் தேடுதல் வளையத்தில் வந்தார்கள்” என்றார்.
இந்தச் சூழலில் தான் கடந்த மார்ச் 13ம் தேதி அவர்கள் மீண்டும் பெங்களூர் வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் காத்திருந்து அவர்களைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட போது அவர்களிடம் 37 கிலோ எம்டிஎம்ஏ போதைப்பொருள் இருந்துள்ளது. இந்த எம்டிஎம்ஏ போதைப்பொருள் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்டதா அல்லது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், இதற்கு நிச்சயம் வேறு யாராவது உதவி இருக்கும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.