தனியார் வசம் ஆகும் திருச்சி விமான நிலையம்.!!

இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள் தனியார்மயமாக்கல் தொடர்பான கேள்விக்கு, திருச்சி, அமிர்தசரஸ், வாரணாசி,
ராஜமுந்திரி உள்ளிட்ட 11 விமான நிலையங்கள் பொது-தனியார் கூட்டாண்மை அடிப்படையில் குத்தகைக்கு விட அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்துத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்களின் விமான போக்குவரத்தில் சென்னை விமான நிலையத்திற்கு பின் திருச்சி சர்வதேச விமான நிலையம் முக்கிய பங்காற்றி வருகிறது. கடந்த வாரம் வெளியான தகவலின்படி திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஒருநாளுக்கு மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு சேவையை பொறுத்தவரை சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர், ஐதராபாத் நகரங்களுக்கு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் வெளிநாடுகளுக்கு ஏராளமான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் காரணமாக திருச்சி மாநகரம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.
இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் தனியாருக்கு குத்தகைக்கு கொடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அரசு சொத்துகளை பணமாக்கும் திட்டத்தின் கீழ் 25 விமான நிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்பை தனியாருக்கு குத்தகைக்கு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 2025-26ஆம் நிதியாண்டில் திருச்சி உள்ளிட்ட 11 விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகை விடும் பணிகள் முடிக்கப்பட உள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த திட்டத்தில் தமிழ்நாட்டின் சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு விட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக திருச்சி விமான நிலையம் தனியாருக்கு குத்தகைக்கு விடப்படவுள்ளது. இதுதொடர்பாக ராஜ்ய சபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய இணையமைச்சர் முரளிதர் மோஹோல் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார்.
அதில், திருச்சி, அமிர்தசர்ஸ், வாரணாசி, ராய்ப்பூர், புவனேஸ்வர் உள்ளிட்ட விமான நிலையங்கள் மற்றும் 6 சிறிய விமான நிலையங்களின் இயக்கம், நிர்வாகம் மற்றும் மேம்பாட்டு பணிகள் அரசு மற்றும் தனியார் பங்கேற்பு திட்டத்தின் கீழ் தனியார் வசம் ஒப்படைக்க அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் மூலமாக நஷ்டத்தில் இயங்கும் விமான நிலையங்களுடன் லாபத்தில் இயங்கும் விமான நிலையங்களும் ஒரு தொகுப்பாக அளிக்கப்படும்.
அதாவது லாபத்தில் இயங்கி வரும் புவனேஸ்வர், அமிர்தசரஸ் விமான நிலையங்களுடன் நஷ்டத்தில் இயங்கி வரும் ஹூப்ளி மற்றும் காங்ரா விமான நிலையங்கள் தொகுப்பாக அளிக்கப்படும். அதேபோல்தான் லாபத்தில் இயங்கி வரும் ராய்ப்பூர் மற்றும் திருச்சி விமான நிலையங்களுடன் அவுரங்காபாத் மற்றும் திருப்பதி விமான நிலையங்களும் அளிக்கப்படவுள்ளது. திருச்சி விமான நிலையம் தனியாருக்கு கொடுக்கப் போகிறோம் என்ற மத்திய அரசு செய்தி திருச்சி மக்கள் இடையேயும் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது