நாளை ஜாக்டோ ஜியோ உண்ணாவிரத போராட்டம்..!

தொடர்ந்து அழுத்தம் கொடுத்தும், பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் திமுக அரசு கண்டுக்கொள்ளாமல் இருப்பதால் நாளை உண்ணாவிரத போராட்டத்தை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளது.

கடந்த முறை நாங்கள் போராடிய போதெல்லாம், எதிர்கட்சியாக இருந்த திமுக, எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, உங்க போராட்டத்தில் நியாயமிருக்கு என்று கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும், ‘சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்ததை வசதியாக மறந்தும், மறுத்தும் வருகிறது. திமுக, ஆட்சிப் பொறுப்பேற்று 4 ஆண்டுகளைக் கடந்தும் இன்றுவரை வாக்குறுதியை நிறைவேற்ற மறுத்து வருகிறது.

 

சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயா் கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வு, தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், அரசுப் பணியாளா்களின் பணிக் காலத்தைப் பணியில் சோ்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும், சாலைப் பணியாளா்களின் 41 மாதப் பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் 30% க்கும் மேலாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்பட அரசு ஊழியா்கள் கூட்டமைப்பின் கோரிக்கைகளையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை.

திமுக அரசின் இந்த செயல்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நாளை மார்ச் 23ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர்.