தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தான் இன்று அதிகாலை மூன்றரை மணிநேரம் இடி – மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தூத்துக்குடி நகரில் பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தூத்துக்குடி உள்பட தமிழ்நாடு முழுவதும் தற்போது வெயில் என்பது அதிகரித்துள்ளது. இன்னும் கோடை காலம் தொடங்காத நிலையில் தினமும் வெயில் மண்டையை பதம் பார்க்கிறது. வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் என்பது பல இடங்களில் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்படியான சூழலில் தான் அவ்வப்போது சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடியில் இன்று கனமழை வெளுத்து வாங்கியது.
தூத்துக்குடியில் சில நாட்களாக வெயில் அதிகரித்து இருந்தது. இப்படியான சூழலில் இன்று அதிகாலையில் தூத்துக்குடியில் பல இடங்களில் கனமழை பெய்ய தொடங்கியது. அதிகாலை 2 மணிக்கு இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடாமல் அதிகாலை 5.30 மணி வரை மூன்றரை மணிநேரம் வெளுத்து வாங்கியது.
மொத்தம் 7 செமீ மழை பதிவாகி உள்ளது. எதிர்பாராத இந்த மழையால் தூத்துக்குடி பிரையண்ட் நகர், முத்தம்மாள் புரம், சண்முகபுரம், திரேஸ்புரம் உள்ளிட்ட பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. அதேபோல் தூத்துக்குடி பழைய மாநகராட்சி முன்பும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் ரமலான் நோன்பு திறக்க பள்ளிவாசல் சென்ற இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டனர்.