கோவை : வடமாநிலங்களில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு தினமும் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது .இந்த ரயில்களில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க ரயில்வே பாதுகாப்பு படையினர் (ஆர்.பி.எப்.)தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் .இந்த நிலையில் நேற்று ரயில்வே பாதுகாப்பு படையினர் கோவை ரயில் நிலையத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். காலை 8 – 30 மணிக்கு சத்தீஸ்கர் மாநிலம் தன்பாத்திலிருந்து கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது . அந்த ரயிலில் முதலாவது பிளாட்பாரத்தில் நின்றது. ரயில்வே பாதுகாப்பு படையினர் அந்த ரயிலில் ஏறி சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள பொது பெட்டியில் வட மாநிலத்தைச் சேர்ந்த 5 பெண்கள் உட்பட 6பேர் தரையில் அமர்த்திருந்தனர். அவர்களை பார்த்தது ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களிடம் விசாரணை நடத்திய போது ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கேரள மாநிலம் ஆலப்புழாவில் வேலை பார்த்த வருவதாகவும், சொந்த ஊருக்கு சென்று விட்டு ஆலப்புழா திரும்புவதாகவும் தெரிவித்தனர். இருந்தபோதிலும் அவர்கள் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்தபோது அதற்குள் பொட்டலம், பொட்டலமாக உயர்ரக கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் ஒடிசா மாநிலம் கந்தமால் பகுதியைச் சேர்ந்த ஜபாத் டி.கால் ( 25) கலடா டி. கால் ( 46 ) கலடா நாயக் ( 37 ) ருபீனா நாயக் (44) ஜோட்சா ராணி டி கால் (44) கெலி நாயக் ( 32)என்பதும், ஒடிசாவில் இருந்து கஞ்சாவை ஆலப்புழாவுக்கு கடத்திச் செல்வதும் தெரிய வந்தது . இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படையினர் 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 62 கிலோ உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 31 லட்சம் இருக்கும். இவர்கள் 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..
கோவை ரயிலில் கடத்திய ரூ. 31 லட்சம் உயர்ரக கஞ்சா பறிமுதல் – பெண்கள் உட்பட 6 பேர் கைது..!
