அதிமுக – பாஜக கூட்டணியா..? அமித் ஷா- எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு.!!

சென்னை: மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசவேயில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் பிரச்சனை தொடர்பாக மட்டுமே அமித் ஷாவிடம் கோரிக்கைகளை வைத்ததாக கூறிய அவர், தேர்தல் நெருங்கும் போது மட்டுமே கூட்டணி அமைப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி அமைய வாய்ப்புகள் இருப்பதாக பேசப்பட்டு வந்தது. அதற்கேற்ப அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் தொடர்ந்து நெருக்கம் காட்டி வந்தனர். முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மகன் திருமண நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அண்ணாமலை உள்ளிட்டோர் சந்தித்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை திடீரென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டார். அவரைத் தொடர்ந்து எஸ்பி வேலுமணி, கேபி முனுசாமி உள்ளிட்டோரும் டெல்லி புறப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று இரவு எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அவருடன் அதிமுக எம்பி சிவி சண்முகம் உள்ளிட்டோரும் இருந்தனர்.

இதன் புகைப்படங்கள் வெளியான நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில், 2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும் என்று பதிவிட்டார். இதனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

2019 மற்றும் 2021 ஆகிய நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக – பாஜக கூட்டணி இணைந்து போட்டியிட்டது. ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்ட நிலையில், நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுக மற்றும் பாஜக தனி கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த நிலையில் அதிமுக – பாஜக மீண்டும் இணைவது விவாதமாகியது.

இந்த நிலையில் சென்னை வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தமிழக பிரச்சனைகள் குறித்து முறையிட்டோம். தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதி தாமதமாகி வருகிறது. அதனை விரைவாக விடுவிக்க கோரிக்கை வைத்தோம்.

கல்வி நிதி, இரு மொழிக் கொள்கை விவகாரம், தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து கோரிக்கை வைத்தோம். அதேபோல் டாஸ்மாக் ஊழல் தொடர்பாக முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவும், தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாகவும் பேசியுள்ளோம். சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசவேயில்லை.

மக்கள் பிரச்சனைகளுக்காக மட்டுமே அமித் ஷாவை சந்தித்தோம். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ளது. அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். அது கிடைத்த காரணத்தால், 45 நிமிடங்கள் தமிழக திட்டங்கள் தொடர்பாக விரிவாக எடுத்து கூறினோம். தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் நெருங்கும் போதுதான் கூட்டணி அமைப்போம்.

கூட்டணி வேறு, கொள்கை வேறு. கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறும். திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் அங்கேயே இருக்கப் போவதில்லை. மேலும் டெல்லியில் திறக்கப்பட்ட அதிமுக அலுவலகத்தை பார்க்க சென்றேன். தமிழ்நாட்டின் உண்மை நிலை குறித்து எடுத்து கூறினோம் என்று தெரிவித்துள்ளார்.