டிஜிட்டல் கைது மோசடி தொடர்பாக 83,668 வாட்ஸ் அப் எண்கள், 3,962 ஸ்கைப் அக்கவுன்டுகளை மத்திய அரசு முடக்கியுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
டிஜிட்டல் கைது மோசடி தொடர்பாக பாஜக உறுப்பினர் மகேஷ் கா்ஷ்யாப் எழுப்பிய கேள்விக்கு, உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமார் மக்களவையில் நேற்று அளித்த பதிலில் கூறியதாவது:
சைபர் மோசடிகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக 7,81,000 சிம் கார்டுகள், 2,08,489 ஐஎம்இஐ எண்கள் செயல் இழக்கம் செய்யப்பட்டன. 83,668 வாட்ஸ் அப் எண்கள், 3,962 ஸ்கைப் அக்கவுன்டுகள் முடக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் கைது மோசடி தொடர்பாக தனியான தரவுகளை தேசிய குற்ற ஆவண காப்பகம் பராமரிக்கவில்லை. ஆனால், இந்த குற்றங்களை தடுக்க, பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
2021-ல் அமைக்கப்பட்ட இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம்(14சி) மூலம், இதுவரை 13 லட்சம் பேரிடம் புகார்கள் பெறப்பட்டு ரூ.4,386 கோடி மதிப்பிலான நிதி மோசடிகள் தடுக்கப்பட்டுள்ளன. இந்திய செல்போன் எண்களில் வரும் மோசடி சர்வதேச அழைப்புகளை அடையாளம் கண்டு தடை செய்யும் முறையை டெலிபோன் நிறுவனங்களுடன் சேர்ந்து அரசு உருவாக்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.