செயின் பறிப்பு கொள்ளைக் கும்பல் சிக்கியது எப்படி..? சென்னை கமிஷனர் அருண் விளக்கம்..!

சென்னையில் அடுத்தடுத்து 6 இடங்களில் பெண்களை குறிவைத்து தங்கச் சங்கிலியைப் பறித்த 3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அருண் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சென்னையில் 6 இடங்களில் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு மும்பை செல்வதற்காக விமானத்தில் செல்லத் தயாரான இருவரை கைது செய்தோம். சென்னையில் வழிப்பறி செய்யப்பட்ட அனைத்து நகைகளும் மீட்கப்பட்டன.

நகைப்பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக தகவல் வந்தவுடன் சோதனை தொடங்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தே வழிப்பறி கொள்ளையர்களை நெருங்கினோம். விமானத்தில் பயணிக்க கடைசி நேரத்தில் யாரேனும் டிக்கெட் வாங்கினார்களா என்று விசாரணையை துவங்கினோம்.

செயின் பறிப்பில் ஈடுபடுவதற்காக நேற்று அதிகாலையில்தான் இருவர் சென்னை வந்துள்ளனர். 3ஆவது நபர் முன்கூட்டியே சென்னை வந்து அனைத்து பகுதிகளையும் நோட்டமிட்டு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் குற்றச்செயலுக்குப் பயன்படுத்திய பைக்கை அடையாளம் காட்ட தரமணி ரயில் நிலையம் அருகே அழைத்து சென்றோம். அப்போது அங்கே அவர்கள் பதுக்கி வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து காவல்துறையினர் மீது சுட்டனர்.

போலீசாரை நோக்கி இரண்டு முறை கொள்ளையர் சுட்டதில், காவல்துறை வாகனத்தின் மீது குண்டு பாய்ந்தது. தற்காப்புக்காக ஒருமுறை மட்டுமே காவல்துறையினர் சுட்டதில் ஈரானிய கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த வடமாநில கொள்ளையன் ஜாஃபர் இரானி என்பவர் உயிரிழந்தார். கொள்ளையர்கள் உடைகளை மட்டும் மாற்றிக்கொண்டார்கள். ஷூவை மாற்றவில்லை அதை வைத்து எளிதாக அவர்களை அடையாளம் காண முடிந்ததது. மேலும், ரயிலில் தப்பிச் சென்ற ஒருவரை ஆந்திர மாநிலம் ஓங்கோலில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

இந்த குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் ஈரானிய கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த கொள்ளையர்கள் என்பதும் மகாராஷ்டிர மாநிலம் தாணே அருகே உள்ள அம்பிவேலிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.