இலங்கைக்கு ஏப்ரல் 5-ம் தேதி ஒருநாள் பயணமாக செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து நேராக ராமேஸ்வரம் வர இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், ராம நவமியை ஒட்டி, ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி, ராமநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து, பாம்பன் பாலத்தை 6-ம் தேதி திறந்துவைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள ஏப்.3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாய்லாந்தில் இருக்கும் பிரதமர் மோடி, உச்சி மாநாட்டிற்குப் பிறகு, இலங்கையில் உள்ள கொழும்பு மற்றும் அனுராதபுரத்திற்குச் செல்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, தேசிய ஜனநாயக கூட்டணியுடன் மீண்டும் அ.தி.மு.க தனது கூட்டணி உறவை புதுப்பித்துக்கொள்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் பிரதமர் மோடி தமிழகம் பயணமாக வருகிறார். தமிழ்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, பா.ஜ.கவின் மாநிலத் தலைமையுடனான கருத்து வேறுபாடுகளைக் காரணம் காட்டி, செப்டம்பர் 2023-ல் பா.ஜ.க.வுடனான தனது உறவைத் துண்டித்துக் கொண்டது.
பாம்பன் ரயில் பாலம் 110 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கடல் அரிப்பின் காரணமாக பாலத்தின் பல இடங்களில் உறுதித்தன்மை குறைந்தது. கப்பல் போக்குவரத்துக்காக பயன்படும் தூக்குபாலத்தில் அவ்வப்போது பழுதும் ஏற்பட்டது. எனவே, பாதுகாப்பு கருதி 2022-ம் ஆண்டு டிசம்பர் 22-ந்தேதியுடன் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
பின்னர், பழைய பாம்பன் ரயில் பாலம் அருகே புதிய ரயில் பாலம் கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியது. ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) நிறுவனத்தால் ரூ.550 கோடி மதிப்பீட்டில் 2.1 கி.மீ தூரத்திற்கு புதிய ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. பின்னர், பிப்ரவரி மாதத்தில் இந்த பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் ஏதும் நடைபெறவில்லை. இந்நிலையில், புதிய பாம்பன் பாலத்தை ஏப்ரல் 6 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்துவைக்க உள்ளார்.