கோவை மாநகர போலீசாருக்கு கோவையில் உயர் ரக போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் போதை பொருட்கள் விற்பனை கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
தனிப்படை போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி கண்காணித்து வந்தனர். அப்போது போதைப் பொருள் விற்பனையில் 7 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இதையடுத்து தனிப்படை போலீசார் கோவையில் பதுங்கி இருந்த 7 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (39), விநாயகம் (34), பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணா காந்தி (34), வடவள்ளியைச் சேர்ந்த மகாவிஷ்ணு (28), சுங்கம் பைபாஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த ஆதர்ஷ் (24), நஞ்சுண்டா புரத்தைச் சேர்ந்த ரித்திஷ் லம்பா (41), திருச்சி ரோடு, ரெயின்போ பகுதி சேர்ந்த ரோகன் செட்டி (30) ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் இன்று கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ. 80 லட்சம் மதிப்பிலான “கொக்கையின், குஷ் ” போன்ற உயர்ரக போதைப் பொருட்கள், ரூ 25 லட்சம் பணம், 3 கார்கள், 12 செல்போன்கள் மற்றும் மதுபாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் கைது செய்யப்பட்ட 7 பேரையும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் கூறியதாவது:
கைது செய்யப்பட்ட 7 பேரும் வெளி மாநிலங்களில் இருந்து போதைப்பொருட்களை கொரியர் மூலம் வாங்கி வந்து இங்கு விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். விற்பனையில் கிடைத்த பணத்தை வைத்து 7 பேரும் .சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் வீடு, நிலம் வாங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. அது சம்பந்தமாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்
கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணு கோவையில் பணிபுரியும் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பெண் எஸ்.ஐ.யின் மகனை காவல் நிலையத்திலிருந்து வேனில் ஏற்ற செல்ல அழைத்து வரும்போது தன் முகத்தை மறைக்க அங்கு நின்று கொண்டு இருந்த உதவி கமிஷனர் ஒருவரிடம் ‘ கர்ச்சீப் ” கேட்டார். அவரும் தான் வைத்திருந்த கர்ச்சிப்பை எடுத்து அவருக்கு கொடுத்தார். அதை வைத்து தன் முகத்தை மறைத்துக் கொண்டார்.இதை அனைவரும் வியப்புடன் பார்த்தனர்.