ராமநாதபுரம் ரயில் நிலையம் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின்விளக்குகள் எரியாததால் பொதுமக்கள்,பயணிகள் அவதியடைகின்றனர். ரயில் பயணிகள் வந்து செல்லும் இந்தப் பகுதியில் அதிக வெளிச்சத்தை அளிப்பதற்காக நகராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட இந்த உயர் கோபுர மின்விளக்குகள் பயன்பாட்டில் அல்லாமல் தற்போது காட்சி பொருளாக மாறிவிட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.
ராமநாதபுரம் ரயில் நிலையம், ராமநாதபுர நகர மக்களுக்கு மட்டுமின்றி மாவட்ட மக்களுக்கு ஒரு முக்கிய போக்குவரத்து வசதியாக இருக்கிறது, மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம், உலகின் முதல் சிவாலயம் அமைந்துள்ள திரு உத்தரகோசமங்கை திருப்புல்லாணி, தேவிபட்டினம் மற்றும் இஸ்லாமியர்களின் புனித தளமான ஏர்வாடி உள்ளிட்ட ஆன்மீக சுற்றுலா தலங்கள் உள்ளதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்தியா முழுவதும் உள்ள வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பயணிகள் , குறிப்பாக வட இந்திய யாத்திரிகர்கள் ரயில் மூலம் வந்து செல்லும் முக்கிய மைய பகுதியாக இருக்கிறது.மேலும் மக்கள் பயணிக்கவும், சரக்குகள் கொண்டு செல்லவும் உதவுகிறது.
ஆனால், இரவு நேரங்களில் பெரியவர்கள்,வயதானவர்கள், குழந்தைகள் பெண்கள் உள்ளிட்டோர் வரும்போது ரயில் நிலையம் அருகே நகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர (ஹைமாஸ்) மின்விளக்குகள் எரியாமல் இருப்பதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி தட்டுத்தடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, கடந்த பல மாதங்களாக இந்த விளக்குகள் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இதனால், அருகில் உள்ள வணிக நிறுவனங்கள் பூட்டிய பின் இரவு நேரத்தில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே மீண்டும் இந்த உயர் கோபுர விளக்குகளை சீரமைத்து எறிய வைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.