இன்று முதல் ஒரு யூனிட் ஜல்லி ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், எம் சாண்ட் ரூ.6 ஆயிரமாகவும், பி சாண்ட் ரூ.7 ஆயிரமாகவும் விலை உயரும்’ என அமைச்சர் துரைமுருகனுடன் நடந்த பேச்சு வார்த்தை பின்னர் கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் விதிக்கப்பட்ட சிறு கனிம நிலவரி மற்றும் ராயல்டி உயர்வு உள்ளிட்ட 24 கோரிக்கைகளை வலியுறுத்தி கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் கடந்த 16-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கத்துடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சுவார்த்தை நடத்தினார்.இதில் உடன்பாடு ஏற்பட்டதால் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
மேலும் இதுதொடர்பாக தமிழக அரசு கூறியிருப்பதாவது:-நிலத்தடி நீர்மட்டம் வரை குவாரி செய்வது, ஓராண்டில் உச்ச உற்பத்தி செய்வது, இரண்டாவது முறையாக மாவட்ட கலெக்டரின் தடையில்லா சான்று தேவையில்லை போன்றவற்றை பரிசீலித்து முடிவு செய்திட மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உறுதி செய்துள்ளது. இதர கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சங்கத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் சங்கத்தினர் அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் சங்கத்தினர் அளித்த பேட்டியில், ‘கனிம வரி உயர்வுக்கு ஏற்ப பொருட்கள் விலையை ஏற்றி கொள்ளலாம் என்று அமைச்சரும், அதிகாரிகளும் அனுமதி கொடுத்து உள்ளனர். எனவே இன்று முதல் ஒரு யூனிட் ஜல்லி ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், எம் சாண்ட் ரூ.6 ஆயிரமாகவும், பி சாண்ட் ரூ.7 ஆயிரமாகவும் விலை உயரும்’ என தெரிவித்தனர்.