அமெரிக்கா பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்துள்ளது. அதன்படி இந்தியாவுக்கு கடந்த 2ம் தேதி 26 சதவீதம் கூடுதல் வரி என்பது விதிக்கப்பட்டது.
இந்த வரி விதிப்பு என்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தை தீவிரமாகி வரும் நிலையில் அதுபற்றி அமெரிக்கா பாசிட்டிவ்வான பதிலை தெரிவித்துள்ளது. அதன்படி டொனால்ட் டிரம்பின் நடவடிக்கையில் இருந்து இந்தியா தப்பிக்கலாம் என்ற புதிய தகவல் கிடைத்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இவர் ஒவ்வொரு நாடுகளுக்கும் பரஸ்பர வரிகளை விதித்துள்ளார். இதில் அதிகபட்சமாக சீனாவுக்கு 245 சதவீத வரி என்பது விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா – சீனா இடையே இருக்கும் மோதல், அதிகார போட்டி உள்ளிட்டவற்றால் சீனாவை குறிவைத்து டொனால்ட் டிரம்ப் இப்படி வரிகளை விதித்துள்ளார். இருநாடுகள் இடையே தற்போது கடும் மோதல் உள்ளது.
அதேபோல் இந்தியாவையும் டொனால்ட் டிரம்ப் விட்டு வைக்கவில்லை. கடந்த 2ம் தேதி டொனால்ட் டிரம்ப் 100க்கும் அதிகமான நாடுகளுக்கு வரிகளை விதித்தார். பென்குவின் மட்டுமே வசிக்கும் தீவுகளை கூட விட்டு வைக்காமல் டொனால்ட் டிரம்ப் வரிகளை அள்ளி வீசினார். அதில் இந்தியாவுக்கு 26 சதவீத வரிகளை விதித்துள்ளார்.
கடந்த 2 ம் தேதி விதிக்கப்பட்ட வரி விஷயத்தில் சீனாவை தவிர இந்தியா உள்பட பிற நாடுகளுக்கான வரிகளை 90 நாட்கள் தற்காலிகமாக டொனால்ட் டிரம்ப் நிறுத்தி வைத்தார். திடீரென்று அதிகப்படியான வரிகளை விதிப்பது என்பது பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புகளை தரும் என்று எக்ஸ்பர்ட் எச்சரித்த நிலையில் டிரம்ப் 90 நாட்கள் தற்காலிகமாக வரிகளை நிறுத்தி வைத்தார். இந்த காலக்கட்டத்தில் பல்வேறு நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளன. தங்களுக்கு விதிக்கப்பட்ட வரிகளை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றன.
இந்த பேச்சுவார்த்தையை இந்தியாவும் தொடங்கி உள்ளது. மத்திய வர்த்தக துறை அமைச்சகம் சார்பில் அமெரிக்க பிரதிநிதிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பேச்சுவார்த்தை என்பது தற்போது முக்கிய கட்டத்தை எட்டி உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இருநாடுகள் இடையேயான வர்த்தக பற்றாக்குறையை குறைப்பது தொடர்பாகவும், பரஸ்பர வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை மேற்கொள்ளவும் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை அமெரிக்கா உறுதி செய்துள்ளது.
இதுபற்றி அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரேர் உறுதி செய்துள்ளார். இதுபற்றி வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”இந்தியா – அமெரிக்கா இடையே பரஸ்பர வர்த்தகம் குறித்த பேச்சவார்த்தைக்கான மேம் உருவாக்கப்பட உள்ளது. இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் விதிமுறைகளை உறுதிப்படுத்த உள்ளது. இதனை மகிழ்ச்சியாக கூறுகிறேன்.
இந்தியாவுடன் அமெரிக்கா வர்த்தகம் செய்து வருகிறது. ஆனால் இந்த வர்த்தகம் என்பது பரஸ்பரமான முறையில் இல்லை. மிகவும் கடினமானதாக உள்ளது. தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவை அமெரிக்காவின் பிற பொருட்களுக்கான சந்தையாக மாற்றவும், அமெரிக்க தொழிலதிபர்களுக்கு தீங்கு விளைவிக்கும் நியாயமற்ற நடைமுறைகளை நிவர்த்தி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொள்ள முடியும்” என்றார்.
இதன்மூலம் இந்தியா – அமெரிக்கா இடையேயான பரஸ்பர வரி விதிப்பு முறை பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று சொல்லப்படுகிறது. அதாவது அமெரிக்கா – இந்தியா இடையேயான வர்த்தகத்தில் அமெரிக்காவிடம் இருந்து நம் நாடு வாங்குவதை விட நம் நாட்டிடம் இருந்து தான் அமெரிக்கா அதிக பொருட்களை வாங்குகிறது. அதுமட்டுமின்றி அமெரிக்காவிடம் இருந்து நாம் வாங்கும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுகிறது.
இது தான் அமெரிக்காவை கோபப்படுத்தி உள்ளது. இதற்காக தான் இந்தியாவுக்கு 26 சதவீத கூடுதல் வரியை அமெரிக்கா விதித்தது. இப்போது அமெரிக்காவிடம் இருந்து கூடுதல் பொருட்களை இந்தியா வாங்க வேண்டும். இதன்மூலம் இருநாடுகள் இடையேயான வர்த்தக பற்றாக்குறையை குறைக்க முடியும். இதுதொடர்பாக அமெரிக்கா – இந்தியா இடையே பேச்சுவார்த்தை தொடங்கிய நிலையில் அதுபற்றிய பாசிட்டிவ்வான பதிலை தான் இப்போது அமெரிக்க பிரதிநிதி கூறியுள்ளார். இதனால் விரைவில் அமெரிக்காவின் பரஸ்பர வரி உள்ளிட்ட டொனால்ட் டிரம்ப்பின் நடவடிக்கையில் இருந்து நம் நாடு தப்பிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.