கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் கலவரம் தொடர்பாக இதுவரை 329 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனியாமூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி ஜூலை 13ஆம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் போராட்டம் நடத்தி வந்தனர். நேற்றைய போராட்டம் வன்முறையாக மாறியது. போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்கினர். போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைக்க முயன்றனர்.
பள்ளி பேருந்துகளுக்கு போராட்டகாரர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, கள்ளக்குறிச்சி தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்.
வன்முறை நடந்த இடத்தை உள்துறைச் செயலாளர் பணீந்தர் ரெட்டியும், காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபுவும் பார்வையிட்டனர். பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய டிஜிபி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மாணவி மரணம் தொடர்பாக அப்பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்நிலையில் மாணவி மரணம் தொடர்பாக இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகாவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கள்ளக்குறிச்சி கலவரத்தில் வன்முறையை துண்டியதாக பெரம்பலூர் மாவட்ட அதிமுக ஐடி பிரிவைச் சேர்ந்த தீபக், சூர்யா ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் கலவரம் தொடர்பாக இன்று காலை வரை 329 பேரை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறைனர் தெரிவித்துள்ளனர். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வன்முறையில் தொடர்புடையவர்களை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.