வாடிகன்: மறைந்த போப் பிரான்சிஸ் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் திங்களன்று உயிரிழந்தார். இதனை தொடர்ந்து வாடிகனில் அவர் வசித்த காசா சாண்டா மார்ட்டா இல்லத்தில் தனிப்பட்ட தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் உடல் வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் போப் உடல் வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்தை வாடிகன் வெளியிட்டது. இந்நிலையில் போப் பிரான்சிஸ் உடல் அவரது இல்லத்தில் இருந்து பொதுமக்களின் அஞ்சலிக்காக பசிலிக்கா, செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்துக்கு நேற்று எடுத்துச்செல்லப்பட்டது. அப்போது மணிகள் ஒலிக்கப்பட்டது. போப் உடலை எடுத்துச்செல்வதை காண கனத்த இதயத்துடன் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டு இருந்தனர். பசிலிக்காவில் நாளை வரை பொதுமக்கள் போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தலாம்.
பியாஸ்ஸா வழியாக போப் உடல் அடங்கிய சவப்பெட்டியை புனித கார்டினல்கள், சுவிஸ் காவலர்கள் ஊர்வலமாக செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கம் பசிலிக்காவிற்கு எடுத்துச்சென்றனர். இது அவர் விடைபெறும் இறுதி நிகழ்வாக மாறியது. புதிய போப் தேர்ந்தெடுக்கும் வரை தற்காலிகமாக வாடிகனை நடத்தும் கார்டினல் கெவின் பாரெல் ஊர்வலத்தை வழிநடத்தினார். பசிலிக்கா நேற்றும், இன்று நள்ளிரவு வரை திறந்து இருக்கும். துக்க காலம் நாளை மாலை 7 மணிக்கு முடிவடையும். அப்போது போப் பிரான்சிஸ் சவப்பெட்டி மூடப்பட்டு சீல் வைக்கப்படும். பின்னர் சனியன்று போப் இறுதிச் சடங்குகள் நடக்கும். போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் கத்தோலிக்க மத தலைவர்கள், பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இரங்கல் பதிவு நீக்கம்
இஸ்ரேலிய வெளியுறவு துறை அமைச்சகம் போப் மறைந்த பின்னர், எக்ஸ் தள பதிவில், போப் பிரான்சிஸ் ஆன்மா சாந்தியடையட்டும். அவரது நினைவு ஒரு ஆசிர்வாதமாக இருக்கட்டும் என்று குறிப்பிட்டு இருந்தது. இந்நிலையில் மறைந்த போப்பிற்காக தெரிவித்த இரங்கல் பதிவை நீக்கியுள்ளது. இது குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவும் மறுப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய ஊடகங்களின்படி தூதர்கள் குறிப்பாக கத்தோலிக்க நாடுகளில் பணியாற்றுபவர்கள் இரங்கல் பதிவு நீக்கப்பட்டதால் கோபமடைந்தனர்.