மாணவர்களே குட் நியூஸ்… தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு.!!

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ளது. பள்ளிக் கல்வி இயக்குனர் வெளியிட்ட சுற்றறிக்கையில், “அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி இறுதி தேர்வு இன்று  (ஏப்ரல் 24) அன்று முடிவடைய உள்ளது.

25ஆம் தேதி முதல் மாணவர்களுக்கான கோடை விடுமுறை என தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியர்கள் விடைதாள் திருத்தும் பணியை முடித்து தேர்வு முடிவை வெளியிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக ஆசிரியர்களுக்கான பள்ளி இறுதி வேலை நாள் ஏப்ரல் 30 எனத் தெரிவிக்கப்படுகிறது.

2025-2026 ஆம் கல்வியாண்டில், 02.06.2025 (திங்கள் கிழமை) அன்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. எனவே, 02.06.2025 அன்று பள்ளிகள் துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு 38 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது மாணவர்களை மிக்க மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கோடைக் காலங்களை பயனுள்ள வகையில் செலவழிக்கவும், சுற்றுப் பயணம் செல்லவும் பெற்றோர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி மீண்டும் திறக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டாலும், அது தள்ளிப் போகவே வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. ஏனெனில் கடந்த ஆண்டுகளில் ஜூன் மாதத் தொடக்கத்தில் கூட வெயில் சுட்டெரித்தது. இதனால் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று ஒரு வாரம் கழித்து தான் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆகவே, இந்த முறையும் வெயில் அதிகமாக இருந்தால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகவே வாய்ப்புகள் உள்ளது.