மயோனைஸ் என்பது முட்டையின் வெள்ளை கருவுடன் எண்ணெய் சேர்த்து கிரிம் (cream) வடிவில் உருவாக்கப்படும் உணவு பொருள் மயோனைஸ் ஆகும்.
இது துரித உணவுகள், ஷவர்மா, தந்தூரி போன்ற அசைவ உணவுகளுக்கு துணை உணவாக (side dish) பயன்படுத்தப்பட்டு வருகிறது. மயோனைஸ் உணவான தயார் செய்யப்பட்ட பிற சில நாட்களில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் கெட்டு போவதாகவும் , இதனால் பல்வேறு உடல் உபாதகைகள் ஏற்பட்டு நோய்கள் பரவும் ஆபத்தும் அதிக அளவில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மயோனைஸுக்கு ஓராண்டு காலம் தடை விதித்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.இது தொடர்பாக கடந்த 8ஆம் தேதி (08.04.2025) அரசின் முதன்மை செயலாளர் மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை அணையர் சார்பில் அரசானை வெளியிடப்பட்டுள்ளது, அதில், “முறையற்ற மற்றும் தரமற்ற வகையில் மயோனைஸ் தயார் செய்தல், அதன் பின்னர் அதனை முறையாக சேமித்து வைக்கப்படாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் மயோனைஸ் பொது சுகாதாரத்திற்கு அதிக பாதிப்பை விளைவிக்கிறது. இதன் காரணமாக, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் – 2006ஆம் ஆண்டின் பிரிவு 30 (2 – ஏ) படி முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் வகை உணவு களுக்கு ஓர் ஆண்டு காலம் தடை விதிக்கப்படுகிறது.
எனவே இந்த உத்தரவின்படி பொதுமக்கள் நலன் கருதி தமிழகத்தில் எந்த பகுதியிலும், மயோனைஸ் உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது, விநியோகம் செய்வது மற்றும் விற்பனை செய்வது உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது. எனவே இந்த அரசிதழல் வெளியிப்பட்ட ஏப்ரல் 8ஆம் தேதியிலிருந்து ஓர் ஆண்டு காலத்திற்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாதாக கடந்த ஆண்டு தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மயோனைஸ் சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து தெலங்கானாவில் மயோனைஸ் பயன்பாட்டுக்கு ஓர் ஆண்டு காலத்திற்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.