பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துவிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை அதிகாலை தில்லி திரும்பினார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா்.
இந்தத் தாக்குதல் குறித்து விவாதிக்க காங்கிரஸ் செயற்குழு வியாழக்கிழமை கூடுகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவின் பாஸ்டனுக்கு கடந்த சனிக்கிழமை பயணம் மேற்கொண்டிருந்த ராகுல் காந்தி, தனது பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு தில்லி திரும்பியுள்ளார்.
இன்று காலை 10 மணிக்கு காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெறவிருக்கும் செயற்க்குழுக் கூட்டத்தில் ராகுல் காந்தியும் கலந்துகொள்ளவிருக்கிறார்.
ஏற்கெனவே, பஹல்காம் தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு – காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா ஆகியோருடன் தொலைபேசியில் ராகுல் காந்தி பேசியிருந்தார்.
முன்னதாக, செளதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தை பாதியில் முடித்துவிட்டு நேற்று காலை தில்லி திரும்பியது குறிப்பிடத்தக்கது.