வங்கதேசத்தில் கவிழும் முகமது யூனுஸ் ஆட்சி..? லண்டனில் ரகசிய மீட்டிங்… சற்று முன் வெளியான பரபரப்பு தகவல்.!!

டாக்கா: வங்கதேசத்தில் நடக்கும் இடைக்கால அரசு நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறது. இந்நிலையில் தான் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசை கவிழக்க பெரிய திட்டம் தீட்டப்பட்டு வருவதாகவும், இதற்காக ரகசிய மீட்டிங் நடந்துள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடந்தது. இது வன்முறையாக மாறியது. இதையடுத்து ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்தார். அதன்பிறகு அங்கு இடைக்கால அரசு நடந்து வருகிறது. இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் உள்ளார்.

ஷேக் ஹசீனா வங்கதேச பிரதமராக இருந்தவரை நம் நாட்டுடன் நெருக்கம் காட்டி வந்தார். இருநாடுகள் இடையேயான உறவு என்பது சிறப்பாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் முகமது யூனுஸ் தான். இவர் நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருகிறார். அதோடு சீனா மற்றும் பாகிஸ்தானுடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறார்.

இதனால் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இருநாடுகள் இடையேயான உறவு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வங்கதேசம் விடவில்லை. அவ்வப்போது நம் நாட்டுக்கு எதிரான கருத்துகளை கூறி சீண்டியும் வருகிறது. இதற்கிடையே தான் தற்போது பரபரப்பான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது வங்கதேச இடைக்கால அரசை கவிழ்க்க பெரிய பிளான் போடப்பட்டு வருகிறதாம். இதுதொடர்பாக ரகசிய மீட்டிங் போட்டு விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம். இடைக்கால அரசை யார் கவிழ்க்க திட்டமிடுகிறார்கள்? என்ற வினா எழலாம். அதற்கான விடையை இங்கே பார்க்கலாம்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நம் நாட்டில் உள்ளார். அவர் மீது வங்கதேசத்தில் கடத்தல், கொலை, மோசடி, தேசத்துரோகம், இனப்படுகொலை உள்பட பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இதனால் ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து நாடு கடத்த வேண்டும் என்று வங்கதேச இடைக்கால அரசு கூறி வருகிறது. ஆனால் நம் நாடு செவிசாய்க்கவில்லை. ஷேக் ஹசீனாவை ரகசிய இடத்தில் வைத்து அவருக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. ஷேக் ஹசீனா நம் நாட்டுடன் நட்பு பாராட்டியதற்கு கைமாறாக மத்திய அரசை அவரை பாதுகாத்து வருகிறது. இதனால் இந்தியா மீதும் ஷேக் ஹசீனா மீதும் வங்கதேச இடைக்கால அரசு கடும் கோபத்தில் உள்ளது.

இதற்கிடையே அவ்வப்போது பேஸ்புக் லைவில் ஷேக் ஹசீனா உரையாடுகிறார். அதில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். மேலும் விரைவில் வங்கதேசம் திரும்புவதாகவும் ஷேக் ஹசீனா கூறி பரபரப்பை கிளப்பி வருகிறார். ஆனால் ஷேக் ஹசீனாவை எப்படியாவது இந்தியாவில் இருந்து நாடு கடத்தி சிறையில் அடைக்க வேண்டும் என்பது அங்குள்ள இடைக்கால அரசு உறுதியாக உள்ளது. இதற்கிடையே தான் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசை கவிழ்க்க ரகசிய மீட்டிங் போடப்பட்டுள்ளது.

இந்த மீட்டிங் என்பது லண்டனில் நடந்துள்ளது. இந்த மீட்டிங்கில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை சேர்ந்த 5 மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மீட்டிங்கில் அவாமி லீக் கட்சியின் இணை பொது செயலாளரும், முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான ஹசன் மஹ்முத், பிரசிடியம் உறுப்பினரும், முன்னாள் மீன்வளத்துறை அமைச்சருமான அப்துர் ரஹ்மான், அமைப்பு செயலாளரும், மாஜி கப்பல் துறை அமைச்சருமான காலித் மஹ்முத் சவுத்ரி, சில்ஹெட் மாவட்ட அவாமி லீக் தலைவரும், முன்னாள் முதல்வருமான சபிஹர் ரஹ்மான் சவுத்ரி உள்ளிட்டவர்கள் இந்த மீட்டிங்கில் பங்கேற்றனர்.

அவாமி லீக் கட்சியின் பிரிட்டன் பொதுச்செயலாளர் சையத் சஜிதூர் ரஹ்மான் பாருக்கின் மகன் பயாஸ் ரஹ்மானின் திருமணம் என்பது லண்டனில் உள்ள இண்டர்கான்டினென்டல் ஹோட்டலில் நடந்தது. அங்கு வைத்து தான் அவர்கள் விவாதித்துள்ளனர். அதாவது முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசை கவிழ்த்து விட்டு அதன் பிறகு ஷேக் ஹசீனாவை வங்கதேசம் அழைத்து வந்து ஆட்சியில் அமர வைப்பது பற்றி அவர்கள் விவாதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு தேவையான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் விவாதித்துள்ளனர். அதாவது தற்போது நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பொருளாதார வீழ்ச்சி, இருதரப்பு மக்களுக்கு இடையேயான மோதல் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி முகமது யூனுஸ் ஆட்சியை கவிழ்ப்பது பற்றி அவர்கள் பேசியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வங்கதேசத்தை பொறுத்தவரை இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்ற தேர்தல் என்பது நடைபெற உள்ளது. இதில் அவாமி லீக் கட்சி பங்கேற்க இன்னும் தடை விதிக்கப்படவில்லை. ஆனால் ஷேக் ஹசீனா இல்லாமல் அந்த கட்சியால் வெல்ல முடியுமா? என்பது பெரிய கேள்வியாக உள்ளது. மாறாக அவர் வங்கதேசம் சென்றாலும் கூட அவரை இடைக்கால அரசு கைது செய்து சிறையில் அடைக்கலாம்.

இதனால் அவரது இடைக்கால ஆட்சியை கவிழ்க்க அவாமி லீக் கட்சி தலைவர்கள் திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இருப்பினும் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசை கவிழ்ப்பது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. ஏனென்றால் வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா மற்றும் அவரது கட்சியை சேர்ந்தவர்கள் மீது பல கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஷேக் ஹசீனா மீது கூட இனப்படுகொலை வழக்கு உள்ளது. அவரது பாஸ்போர்ட் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் மாணவ அமைப்பினர் ஷேக் ஹசீனா மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக உள்ள முகமது யூனுஸ் மீதும் தொடக்கத்தில் இருந்த நம்பிக்கை அந்த நாட்டு மக்கள் மத்தியில் குறைந்துள்ளது. இருப்பினும் அது இன்னும் முகமது யூனுஸ் மீதான கடும் அதிருப்தியாக மாறவில்லை. இப்படியான சூழலில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசை கவிழ்ப்பது அவாமி லீக் கட்சியினருக்கு சாத்தியமா? என்பது பெரிய கேள்வியை எழுப்பி உள்ளது. இருப்பினும் கூட நாம் ஒன்றை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். அரசியல் விஷயத்தில் என்ன வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். இதனால் வங்கதேசத்தில் என்ன நடக்கிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.