தமிழகத்தில் திமுக ஆட்சியின் 4 ஆண்டுகளில் அமைச்சரவை 5 முறை மாற்றங்களை சந்தித்துள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில், செந்தில் பாலாஜி, பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள் மீதான சர்ச்சைகள் மற்றும் முதலமைச்சரின் அதிருப்தி காரணமாக அமைச்சரவை மாற்றம் குறித்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
தமிழகத்தில் திமுக கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்தது. 4 வருடங்களை முடிவடைந்து 5ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கவுள்ளது. இந்த 4 வருட காலத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. அமைச்சரவையிலும் 5 முறை மாற்றங்களை சந்தித்துள்ளது.
அமைச்சரவையில் புதிதாக உதயநிதி, டி.ஆர்.பி.ராஜா, சேலம் ராஜேந்திரன், கோவி. செழியன் ஆகியோர் இணைந்துள்ளனர். அமைச்சர்களாக இருந்த மனோ தங்கராஜி, மைதீன் கான் நீக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற வழக்கால் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி அமைச்சர் பதவியை இழந்து மீண்டும் தற்போது அமைச்சர்களாக தொடர்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலமே உள்ள நிலையில், திமுக அமைச்சர்களுக்கு அடுத்தடுத்து தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது. இதன் படி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜி சுமார் ஒரு வருட காலத்திற்கு மேல் சிறையில் இருந்தார்.
தற்போது ஜாமினில் உள்ள அவருக்கு மீண்டும் உச்சநீதிமன்றம் செக் வைத்துள்ளது. ஜாமினில் தொடர வேண்டுமா.? அல்லது அமைச்சராக இருக்க வேண்டுமா.? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. வருகிற 28ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில் ஜாமினில் தொடரவே செந்தில் பாலாஜி விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே ஓரிரு நாட்களில் தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்யக்கூடும் என கூறப்படுகிறது. இதே போல மூத்த அமைச்சரான பொன்முடியின் சர்ச்சை பேச்சும் திமுக மீது அதிருப்தியை உருவாக்கியுள்ளது. கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர், அமைச்சரவையில் இருந்தும் நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதே போல ஒரு சில அமைச்சர்களின் மீதும் முதலமைச்சர் ஸ்டாலின் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலமே உள்ள நிலையில், அமைச்சரவையை மாற்றலாமா அல்லது துறைகளை மற்ற அமைச்சர்களிடம் பிரித்து வழங்கலாமா என ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி மின்சாரத்துறை அமைச்சர் பி டி ஆர் க்கும், மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அமைச்சரவையை மாற்றி அமைக்கும் பட்சத்தில் பொன்முடிக்கு பதிலாக மைதீன் கான், தமிழரசி, துரை சந்திரசேகர் ஆகியோரின் பெயர்கள் அமைச்சரக்கு பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.